தமிழ் சினிமாவின் பொற்காலம் எனப் போற்றப்பட்ட காலக்கட்டமான 80களில் கொடி கட்டி பறந்த இயக்குநர்களான கே. பாலச்சந்தர், பாக்யராஜ், பாரதிராஜா உள்ளிட்டோரின் பட்டியலில், அமைதியாக குடும்பக் கதைகளின் மூலம் தனது கொடியை உயரத்தில் பறக்க விட்டவர் இரெண்டெழுத்து வித்தைக்காரர் விசு. 


“நாடகக் கலைஞர் என்ற பின்புலத்தோடு வந்தவர் தானே... அது தான் அவரின் படங்களும் நாடக பாணியிலேயே இருக்கிறது” என விமர்சனங்களையே தனது பலமாகக் கொண்டு, பல பல வெற்றி படங்கள் மூலம் முன்னேறியவர். அப்படி கோலிவுட் திரையுலத்தையே திரும்பி பார்க்க வைத்த ஒரு படம் தான் 1986ம் ஆண்டு வெளியான 'சம்சாரம் அது மின்சாரம்'. இப்படம் வெளியாகி 37 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.



சிறிய பட்ஜெட்டில் ஒரு கதையை எடுத்து அதன் மூலம் பெரிய வசூலைக் குவித்த படங்களின் பட்டியலில் முதன்மையான இடத்தை பிடித்த படம் இது. சரோஜினி, சிதம்பரம், சுப்ரமணிய சிவா, பாரதி என கதாபாத்திரங்கள் பெயர்கள் மூலம் நமது நாட்டின் முக்கிய தலைவர்களை நினைவுகூர்ந்திருப்பார் . குடும்பப்படம் தானே இதில் என்ன பெரிசா சொல்லிவிட போகிறார் என நினைத்தவர்களுக்கு, மிகவும் அதிகமான வோல்டேஜ் கொண்ட மின்சாரத்தை படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை பாய்ச்சி மரத்துப்போக செய்தார். 


வசனங்களுக்கும் நடிப்புக்கும் முக்கியத்துவம் கொடுத்து  திரைக்கதையை அமைப்பதில் விசுவை அடித்துக் கொள்ள முடியாது. படத்தின் வசனங்கள் ஒவ்வொன்றும் ஆணியில் அடித்தார் போல் இன்றும் ரசிகர்கள் நெஞ்சங்களில் இறங்கியுள்ளது என்றால் அது மிகையல்ல. வேலைக்காரிக்கு அத்தனை கனமான கதாபாத்திரம். அந்த கண்ணம்மாவை மறக்க முடியுமா! ஆச்சி மனோரமாவை தவிர வேறு யாராலும் அந்த கதாபாத்திரத்தில் அத்தனை அழகாக அழகு சேர்த்து இருக்க முடியுமா என தெரியவில்லை, யோசிக்கவும் முடியவில்லை. 


 



ரகுவரன், லட்சுமி, மாதுரி, சந்திரசேகர், கமலா காமேஷ், கிஷ்மு, திலீப், இளவரசி இப்படி ஒவ்வொருவரின் நடிப்பும் கனகச்சிதம். ரகுவரன் - விசு இடையே நடக்கும் காரசாரமான விவாதம் படத்தின் ஹைலைட்.  'கண்ணம்மா நீ கம்முனு கிட'  எனும் இந்த வசனம் தமிழ் சினிமாவின் மறக்க முடியாத வசனங்களில் ஒன்று. அது தான் விசுவின் பஞ்ச்.


மனோரமா ஒவ்வொரு முறை அதை சொல்லும்போது விசில்களும் கைத்தட்டல்களும் திரையரங்கங்களை தெறிக்க விட்டன. கிளைமாக்ஸ் காட்சியில் லட்சுமி பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் தனி குடித்தனம் பற்றின அத்தனை சூட்சமத்தை வெளிப்படுத்தினார் விசு.


அந்தக் காலகட்டத்திலேயே சில்வர் ஜூப்ளியையும் தாண்டி சக்கை போடு போட்ட 'சம்சாரம் அது மின்சாரம்' திரைப்படம் இன்றும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானால் அதை கைதட்டி ரசிக்க கூட்டம் உண்டு என்பது தான் அதன் தனித்துவம்! இது அல்லவா ஒரு படத்துக்கு கிடைத்த மாபெரும் வெற்றி!