இந்தியாவின் மைக்கல் ஜாக்சன் என்று அழைக்கப்படும் பிரபுதேவா இன்று தனது 51-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.


பிரபுதேவா




மணிரத்னம் இயக்கிய மெளன ராகம் படத்தில் ஜான் பாபு நடனமாடிக் கொண்டிருக்க பக்கத்தில் ஒரு 13 வயது சிறுவன் உட்கார்ந்து தனக்கும் நடனத்திற்கும் சம்பந்தமே இல்லாததுபோல் புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருப்பார். இந்த பதின்மூன்று வயது சிறுவன் தான் ஒட்டுமொட்ட இந்திய திரைப்பட நடனத்தின் இலக்கனத்தை மாற்றப் போகிறார் என்று யாரும் யூகித்திருக்க மாட்டார்கள். ஆம் அந்த 13 வயது சிறுவன்தான் இன்று இந்தியாவின் மைக்கல் ஜாக்சன் என்று அழைக்கப்படும் பிரபுதேவா.




தந்தையைப் பார்த்து நடனத்தின் மேல் ஆர்வம்


1973 ஆம் ஆண்டு மைசூரில் பிறந்த பிரபுதேவாவின் தந்தை திரைப்படங்களில் நடன கலைஞராக பணியாற்றிவந்தார். தனது அப்பாவை பார்த்து நடனத்தின் மேல் ஆர்வம் கொண்ட பிரபுதேவா கிளாசிக்கல் மற்றும் மேற்கத்திய நடனத்தை கற்றுக் கொண்டார். மணிரத்னம் இயக்கிய மெளன ராகம் படத்தில் தனது 13 வயதில் திரையில் தோன்றினார் பிரபுதேவா. தொடர்ந்து அக்னி நட்சத்திரம் படத்தில் ஜூனியர் ஆர்டிஸ்டாக பின்னணியில் நடனமாடினார்


அதுவரை தமிழ் திரைப்படங்களில் நடனங்களில் புதிய முயற்சிகளை மேற்கொண்டு தனித்துவமான ஒரு பாணியை உருவாக்கி இருந்தார் உலகநாயகன் கமல்ஹாசன். எந்தப் படத்தைப் பார்த்தாலும் இது கமல் ஆடுற மாதிரியே இருக்கே என்று பார்த்தவுடன் சொல்லிவிடலாம். பிரபுதேவா நடனம் அமைத்த முதல் படமே கமல் நடித்த வெற்றிவிழா தான். அன்று தொடங்கி தமிழ், இந்தி , தெலுங்கு என 100 க்கும் மேற்பட்ட படங்களுக்கு டான்ஸ் மாஸ்ட்ராக பணியாற்றி இருக்கிறார் பிரபுதேவா. தெலுங்கில் சிரஞ்சீவி , நாகர்ஜூனா, தமிழில் ரஜினி , கமல், விஜய் என எல்லா ஸ்டார்களுடனும் பணியாற்றி இருக்கிறார்.




 


இசை, நடனம் போன்ற கலைகளில் எவ்வளவு பயிற்சி இருந்தாலும் திரைப்படங்களைப் பொறுத்தவரை அவற்றை அப்படியே சினிமாவில் கொண்டுவர முடியாது. திரைப்படங்களில் எல்லா தரப்பு மக்களும் தொடர்புபடுத்திக்கொள்ளும் வகையில் இந்த கலைகள் உருமாற்றம் அடைய வேண்டும். அப்படி எல்லா தரப்பு மக்களும் பார்த்து ரசிக்கும் வகையிலான ஒரு நடன முறையை உருவாக்கினார் பிரபுதேவா.


90களில் பிரபலமாக தொடங்கிய மேற்கத்திய ஹிப்ஹாப் வகை உடைகளையும் நடனத்தையும் நாம் காதலன் படத்தில் ஊர்வசி , முக்காபுலா, ஜெண்டில்மேன் படத்தில்  சிக்கு புக்கு ரயிலே பாடல்களில் பார்க்கலாம். சமீபத்திய நேர்காணல் ஒன்றில் இசையை உன்னிப்பாக கவனித்தாலே அதற்கு எப்படி ஆட வேண்டும் என்று தெரிந்துவிடும் என்று பிரபுதேவா கூறியிருந்தார். மின்சார கனவு படத்தில் வெண்ணிலவே வெண்ணிலவே பாடலில் ஒரு தென்றலைப் போல் இலகுவாக அவரது ஒவ்வொரு அசைவும் இருப்பதை பார்த்தால் அவர் சொல்வதில் இருக்கும் அர்த்தத்தை புரிந்துகொள்ள முடியும். இந்தப் பாடலுக்காக அவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


பெரும்பாலான நடிகர்கள் பாடலுக்கு நடனம் ஆடுவதைப் பார்க்கையில் உடல் ஒரு பக்கம் ஆடிக்கொண்டிருக்க அவர்களின் முகம் மற்றும் சிரித்தபடி எந்த வித மாற்றமும் இல்லாமல் கேமராவை பார்த்துக் கொண்டிருக்கும். பிரபுதேவா ஆடுவதை பார்ப்பதில் ஒரு அலாதியான அனுபவம் என்னவென்றால் அவர் கேமரா இருப்பதையே மறந்து தன்போக்கில் உணர்ச்சிவசத்தில் ஆடிக்கொண்டிருப்பார். ஒவ்வொரு அசைவிற்கும் அவரது முகபாவனைகளும் சேர்ந்தே மாறும். உதடுகள் தன்போக்கில் அசைவதை நாம் கவனிக்கலாம்.


நடிகர் பிரபுதேவா


டான்ஸ் என்றால் பிரபு தேவா தான் என்று மக்கள் சொன்னாலும் அதே அளவிற்கு நடிகராகவும் தன்னை நிரூபித்து காட்டியவர் பிரபுதேவா. 1994 ஆம் ஆண்டு வெளியான இந்து படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமாகி காதலன், மிஸ்டர் ரோமியோ, மின்சார கனவு, வி.ஐ.பி., காதலா காதலா, ஏழையின் சிரிப்பில், வானத்தைப் போல , உள்ளம் கொள்ளை போகுதே, அள்ளித் தந்த வானம் , பெண்ணின் மனதை தொட்டு ,  1 2 3, எங்கள் அண்ணா ,  என பல வெற்றிப் படங்களில் நடித்தார். எளிமையான தோற்றம் , இயல்பான நடிப்பு என ரசிகர்களை கவர்ந்தார் பிரபுதேவா.


இயக்குநர்


நடனம் , நடிப்பு தொடர்ந்து பிரபுதேவா தெலுங்கில  இயக்குநராக அறிமுகமானார். தமிழில் விஜய்யை வைத்து அவர் இயக்கிய முதல் படமான போக்கிரி பட்டி தொட்டி எல்லாம் தூள் கிளப்பியது. தமிழில் வில்லு எங்கேயும் காதல், வெடி உள்ளிட்ட படங்களையும் இந்தி மற்றும் தெலுங்கு மொழியிலும் படங்களை இயக்கினார்.


மீண்டும் நடிகராக திரையில்


கிட்டதட்ட 11 ஆண்டுகளுக்குப் பிறௌ ஏ.எல் விஜய் இயக்கிய தேவி படத்தின் மூலம் மீண்டும் நடிப்பிற்கு திரும்பினார் பிரபுதேவா. பல வருடங்களாக அவரை திரையில் பார்க்காத ரசிகர்கள் இந்தப் படத்தை வெற்றிபடமாக மாற்றினார்கள். தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய மெர்குரி , குலெபகாவலி, பகீரா ஆகிய படங்களில் நடித்தார். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜயுடன் கோட் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய் , பிரபுதேவா , பிரஷாந்த் ஆகிய மூவரும் இணைந்து நடனமாடும் பாடலை பார்க்க ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள். இந்தியாவின் மைக்கல் ஜாக்சன் பிரபுதேவாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.