இயக்குநரும், நடிகருமான இராதாகிருஷ்ணன் பார்த்திபன் இயக்கி நடித்துள்ள இரவின் நிழல் படம் இரவின் நிழல். இந்தத் திரைப்படம் வரும் 15 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் அந்தத் திரைப்படத்தில் ரஹ்மான் பணியாற்றியது பற்றி சிலாகித்துப் பேசியுள்ளார் பார்த்திபன்.
காசு பற்றி கவலைப்படாத ரஹ்மான்:
இரவின் நிழல் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இது குறித்து பார்த்திபன் கூறுகையில், நான் இந்தப் படத்தில் ஆஸ்கர் விருது வாங்கின ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தால் ஆஸ்கர் கிடைக்குமே என்ற நப்பாசையும் கொண்டுதான் அவரை அணுகினேன். அதுதான் பச்சை உண்மை. அதை சொல்வதில் எனக்கு எவ்வித தயக்கமும் இல்லை. முதன்முதலில் நான் ரஹ்மானை சந்தித்து இரவின் நிழல் கதை, அதை எப்படி ஒரே ஷாட்டில் எடுக்கப்போகிறேன் என்பது பற்றி கூறினேன். அதற்கு அவர் எப்படி ஒரே ஷாட்டில் எடுப்பீர்கள் என்று திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருந்தார். அதன் பின்னர் நான் எல்லாவற்றையும் விளக்கினேன். அவரும் இந்த பிராஜக்டில் இடம்பெறுவதை உறுதி செய்தார். அவர் பணம் காசு பற்றி பேசவே இல்லை. படத்திற்கான இசையை அவர் பார்த்துப் பார்த்து செதுக்கியுள்ளார். இவ்வாறு பார்த்திபன் கூறினார்.
படத்துக்குப் படம் வித்தியாசம்..
ஒத்த செருப்பு சைஸ் 7 படத்தில், படம் முழுவதும் ஒரே கதாபாத்திரம் மட்டும் திரையில் தோன்றும் படியும், மற்ற கதாபாத்திரங்களை குரலாக மட்டுமே கொண்டு இயக்கி நடித்தார். இந்த திரைப்படம் பார்த்திபன் ரசிகர்களிடையே மட்டுமில்லாமல், சினிமா ரசிகர்களிடையேவும் பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. தனது அடுத்த படமான இரவின் நிழல் படத்தினை, உலகின் முதல் நான் லேயர் சிங்கிள் ஷாட் படமாக எடுக்கப்போவதாக அறிவித்தார். சுமார் 90 நிமிடங்களுக்கு மேல் உள்ள இந்தப் படத்தினை சிங்கிள் ஷாட்டில் எடுத்து உலகையே தமிழ் சினிமாவின் பக்கமும், தனது பக்கமும் திருப்பியுள்ளார். இந்த திரைப்படத்தின் ஒவ்வொரு அப்டேட்டுகளையும் தனது பாணியில் வெளியிட்டு வருகிறார்.
ஏ.ஆர்.ரஹ்மான் காலம்:
2022 தொடங்கி ஆறு மாதங்கள் ஆகிவிட்டன. இதுவரை வந்த தமிழ்த் திரைப்படங்களில் அனிருத் ஆதிக்கம் இருந்தது. டான், காத்துவாக்குல ரெண்டு காதல் என நிறைய ஹிட் கொடுத்துவிட்டார். இனி ஜூலை 15ல் இரவின் நிழல், அப்புறம் விக்ரமின் கோப்ரா, சிம்புவின் வெந்து தணிந்தது காடு, திரை ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ள பொன்னியின் செல்வன் ஆகியன வெளியாகியுள்ளன. பொன்னியின் செல்வன் செப்டம்பர் 30ல் வெளியாகும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த படங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை என்பதால் 2022ன் செகண்ட் ஹாஃபில் ரஹ்மான் மேனியா எகிறும் என்று திரைத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.