நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டவர்  மனோபாலா. தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி என்னும் நிகழ்ச்சி மூலம் சமையலிலும் கில்லாடி என்பதை நிரூபிக்க களமிறங்கியுள்ளார்.  1982-ஆம் ஆண்டு வெளியான ஆகாய கங்கை திரைப்படம் மூலமாக இயக்குநராக அறிமுகமான மனோபாலா , அடுத்தடுத்து பல படங்களில் இயக்குநராக களம் கண்டவர். இதுவரையில்   40 திரைப்படங்களையும், 16 தொலைக்காட்சித் தொடர்களையும் இயக்கியுள்ளார். இது தவிர 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 




மனோபாலா ஒரு சிறந்த வீணை வாசிப்பாளரும் கூட. இளம் வயதிலேயே இசையில் அதிக ஈடுபாடு கொண்ட மனோபாலா , தான் சினிமாவிற்கு வந்தது எப்படி என்பது குறித்து நிகழ்ச்சி  ஒன்றில் பேசியுள்ளார். அதில் “நான் சினிமாவிற்கு வந்ததற்கு விதிதான் காரணம். சினிமாவை நேசிக்கும் என்னை , சினிமாவை நேசிக்கும் ஒருவர்தான் கொண்டு வந்தார். அவர்தான் இதற்கு மூலக்காரணம் . அவர் வேறு யாருமல்ல நடிகர் கமல்ஹாசன்தான். நான் இயக்குநர் ஆன பிறகு , இன்னொரு படத்திற்கு ஒரு பெரிய தயாரிப்பாளர். அதாவது தமிழ் சினிமாவில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய தயாரிப்பாளர் அவர். இங்கிருந்து நடிகர் நடிகைகள் எல்லோரையும் கூட்டிக்கொண்டு , பொள்ளாச்சிக்கு ஷூட்டிங்கிற்காக சென்றுவிட்டோம். ஹீரோ - ஹீரோயினுக்கு நடிப்பு வரவில்லை. அதனால் இரவு பயிற்சி கொடுத்துவிட்டு , அன்றைக்கு பாடல் காட்சிகளை எடுக்க முடியவில்லை என அங்கிருந்து பேக்-அப் செய்துகொண்டு ரூமிற்கு வருகிறோம். காலையில் பார்க்கிறேன் என்னையும் கேமரா மேன் ஹரி என்பவரையும் தவிர வேறு யாருமே அங்கு இல்லை. மொத்த யூனிட்டும் பேக் ஆகிவிட்டது. அவனுக்கு டேரக்‌ஷன் தெரியலை. அப்படின்னு பொள்ளாச்சிலேயே விட்டுட்டு வந்துட்டாங்க.


அந்த ரிசப்ஷன்ல 600 ரூபாய் பணம் கொடுத்திருந்தாங்க. அநாதையா நின்னேன் அன்னைக்கு. இப்போ கூட அதை நினைத்தால் கண்ணு கலங்குது. அதன் பிறகு  அங்கிருந்து அப்படியே பழனிக்கு போயிட்டு, ”முருகா உன்னை பார்க்க மேல வரமேட்டேன்” என கோவமாக தேங்காய் உடைத்துவிட்டு வந்தேன். அந்த சம்பவத்திற்கு பிறகு நான் பெரிய இயக்குநர் ஆனேன்.


அதே தயாரிப்பாளர் என்னை, இயக்குநரே என ஒருமுறை அழைத்தார். நான் சுற்றி முற்றி திரும்பி பார்த்துவிட்டு, ”யாரண்ணே சொல்லுறீங்க..எனக்குதான் இயக்கம் தெரியாதுனு சொன்னீங்களே..எதுக்கு என்னை கூப்பிடுறீங்கன்னு” கேட்டேன். இதெல்லாமே நடக்கும். ஒரு கதவு அடைத்தால் மற்றொரு கதவு திறக்கும் என்பதற்கு மிகப்பெரிய உதாரணம்” என தனது வாழ்க்கையில் நடந்த கசப்பான அனுபவங்களை பகிர்ந்துள்ளார் மனோபாலா.