நடிகர் மனோபாலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 


தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமைகளை கொண்ட நடிகர் மனோபாலா, கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும், அவர் தற்போது நலமுடன் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 


 நடிகர் சங்க தலைவர் பூச்சி முருகன் நடிகர் மனோபாலாவை நேரில் சென்று நலம் விசாரித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. மனோபாலா விரைவில் குணமாகி மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 


மனோபாலாவின் திரை வாழ்க்கை 


தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியைச் சேர்ந்த மனோபாலாவுக்கு சிறுவயது முதலே சினிமா மீதான ஆர்வம் காரணமாக சென்னை வந்தார். உதவி இயக்குநராக சேருவதற்கு முன்பே கமல் குடும்பத்துடன் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. அவர்களின் குடும்பத்தில் ஒருவராக மாறிய மனோபாலா,  கமலின் சிபாரிசில் பாராதிராஜாவிடம் சேர்ந்து கொண்டார். புதிய வார்ப்புகள் படத்தில் உதவி இயக்குநராக இணைந்தார்.


தொடர்ந்து கார்த்திக், சுஹாசினி நடித்த ஆகாயகங்கை படத்தின் மூலம் இயக்குநராக மாறிய மனோபாலா, அடுத்தப்படம் பண்ண 3 ஆண்டுகள் ஆனது. நடிகர் மோகனுக்கு ஆரம்ப காலத்தில் இவர் செய்த உதவியால் மீண்டும் திரையுலகில் வெற்றி இயக்குநராக உயர்ந்தார். பிள்ளை நிலா, ரஜினியை வைத்து ஊர்க்காவலன், விஜயகாந்தை வைத்து சிறைப்பறவை, என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான் படங்கள் அவருக்கு பெயரைப் பெற்றுக் கொடுத்தது. 


மூடு மந்திரம், வெற்றிப்படிகள், மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், செண்பகத்தோட்டம் என வரிசையாக படங்களை இயக்கிய மனோபாலா சின்னத்திரை தொடர்களையும் இயக்கியுள்ளார். இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரின் அன்பு தொல்லையால் நட்புக்காக படத்தில் நடிக்க ஆரம்பித்தவர் இன்று தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஒருவராக திகழ்கிறார். 


கிட்டதட்ட 100 படங்களுக்கு மேல் நடித்துள்ள அவர், சதுரங்க வேட்டை படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் மாறினார். முன்னணி இயக்குநர்கள் தொடங்கி புதுமுக இயக்குநர்கள் வரை அனைவரது படத்திலும் மனோபாலா வந்தாலே ரசிகர்களுக்கு காமெடி தான் என்னும் அளவுக்கு தன் நடிப்பு முத்திரையை பதித்துள்ளார்.தற்போது விஜய்யின் அடுத்த படத்தில் அவர் நடிக்கவுள்ளா என்பது குறிப்பிடத்தக்கது.