தமிழ் சினிமாவில் அதுவரையில் இருந்த ஃபார்மெட்டை மாற்றியமைத்த பெருமை பாரதிராஜாவுக்கும் , பாக்கிராஜுக்கும் உண்டு. இருவருமே நிறைய மாறுபட்ட கண்ணோட்டத்தில் படைப்புகளை மக்கள் மத்தியில் பதித்திருந்தனர். பாக்கியராஜ் , இயக்குநராக மட்டுமல்லாமல் தனது படங்களில் நடித்தும் வந்தார். விவசாய குடும்ப பின்னணியில் இருந்து வந்த பாக்கியராஜ், தான் வளர்ந்ததோடு மட்டுமல்லாமல் பலரையும் வளர்த்துவிட்டவர். அது குறித்து அவரே பகிர்ந்திருக்கிறார்.




அதில் ”அப்பா விவசாயி. அதனால அவர் ஊரை விட்டு வரல அங்கேயே இருந்துட்டாரு. நான் அம்மா , தாத்தா , பாட்டி எல்லோரும் சென்னைக்கு வந்துட்டோம். அம்மாதான் வேலை செய்து தாய்மாமன்களுக்கும் உதவி செய்து, என்னையும் எனது சகோதரர்களையும் படிக்க வைத்தார். தாய்மாமா, அம்மா எல்லோரும் கடுமையாக உழைத்துதான் குடும்பம் நல்ல நிலைக்கு வந்தது. நான் முதன் முதலாக கதாநாயகனாக நடித்த புதிய வார்ப்புகள் திரைப்படம் வெளியாவதற்கு சில நாட்களுக்கு முன்னதாகத்தான் அம்மா இறந்துபோனாங்க. தேனாம்பேட்டையில மேன்ஷன் ஹவுஸ் ஒன்னு இருந்துச்சு. அதுல  நிறைய பேச்சுலர்ஸ் இருப்பாங்க. அதுலதான் சங்கிலி முருகன் , சின்ன முருகன் இருந்தாங்க. அதே போல கவுண்டமணி, செந்தில் எல்லோருமே அங்க வந்துட்டு போயிட்டு இருப்பாங்க. அங்க இருந்தவங்க எல்லோருமே நாடகத்துல நடிச்சுட்டு இருப்பாங்க. நாடகம் இல்லாத  நேரத்துல அங்கிருக்கும்  இடத்துல எல்லோரும் அமர்ந்து நாடகத்தை பற்றி பேசிக்கொண்டிருப்பார்கள். அப்படித்தான் கள்ளாப்பெட்டி சிங்காரம் அங்கே பேசிட்டு இருப்பாரு. அவர் குரல் , தொணி எல்லாமே வித்தியாசமாக இருந்தது. அங்கிருப்பவர்களிலேயே அவர்தா சீனியர். அங்கிருந்தவங்க எல்லோருக்குமே தனித்தனி திறமை இருந்தது. அவங்களை  எல்லாம் பயன்படுத்தலாமேனுதான் எனக்கு தோன்றியது. சங்கிலி முருகனோட கோகுலகிருஷ்ணானு ஒருத்தர் இருந்தாரு. அவர்க்கிட்ட நான் ஆரம்பத்துல வேலை கேட்டுக்கொண்டிருந்தேன். அவர் என்னிடம் உதவி இயக்குநராக பணிபுரிய தானாக கேட்டார். அப்போ நான் சீனியர் நீங்க இடையில் ஒரு பையனை வைத்துக்கொள்ளுங்கள். எனக்கு நேரடியா வேலை சொல்ல ஒரு மாதிரியாக இருக்கு அப்படினு சொன்னேன். அதன் பிறகு ஒரு பையன சேர்த்தாரு. மௌன கீதம் வரைக்கும் என்கூட வேலை செய்தார். அதன் பிறகு  கவுண்டமணியையும் படத்துல சிபாரிசு செய்து நடிக்க வைத்தேன். செந்திலுக்கு நான் எல்லா படங்கள்லையும் சின்ன சின்ன  வாய்ப்பு கொடுத்தேன். தூரல் நின்னு போச்சு படத்துல நம்பியார் அண்ணன் கூடவே போட்டுட்டேன். அப்போ செந்தில் அழுதுட்டான். ஏன்னு கேட்ட பொழுது , நடிப்பெல்லாம் நான் பெருசா நினைத்துக்கொண்டிருந்தேன் . நம்பியார் அண்ணன் கூடவே நடிக்க வாய்ப்பு கிடைச்சிருக்குன்னு சொன்னான்“ என கடந்த கால அனுபவங்களை பகிர்ந்துக்கொண்டார் இயக்குநர் பாக்கியராஜ்.