மலையாள திரையுலகின் பிரபல நடிகர் திலீப். கடந்த 2017ம் ஆண்டு தமிழ் மற்றும் மலையாள திரையுலகின் பிரபல நடிகையை மர்மநபர்கள் காரில் கடத்தி பாலியல் தொல்லை அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கை விசாரித்த போலீசார் இதில் மலையாள திரையுலகின் பிரபல நடிகர் திலீப்பிற்கு தொடர்பு இருப்பதாக அறிந்தனர்.
இதையடுத்து, இவர் மீது வழக்கு தொடரப்பட்டு இவர் கைது செய்யப்பட்டார். கடந்த 8 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் இன்று எர்ணாகுளம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கில் 8வது குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்ட திலீப்பிற்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லாததாலும், குற்றம் நிரூபிக்கப்படாததாலும் அவர் விடுதலை செய்யப்படுவதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடந்தது என்ன?
கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17ம் தேதி பாதிக்கப்பட்ட நடிகை படப்பிடிப்பு முடிந்து எர்ணாகுளம் நோக்கி காரில் வந்து கொண்டிருந்தார். அங்கமாலியில் உள்ள அத்தாணி அருகே அவர் வந்து கொண்டிருந்தபோது திடீரென காரில் வந்த கும்பல் உள்ளே நுழைந்து நடிகைக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளனர்.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட நடிகை இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையில் புகார் அளித்தார். கேரளாவையே அதிரவைத்த இந்த சம்பவத்தில் நடிகையின் உதவியாளராக இருந்த பல்சர் சுனில், மார்ட்டின் ஆண்டனி, மணிகண்டன், விஜீஷ், சலீம், பிரதீப் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர். இந்த வழக்கின் விசாரணையில் மலையாள திரையுலகின் பிரபல நடிகர் திலீப்பிற்கும் இதில் தொடர்பு இருப்பதாக தெரிய வந்தது.
6 பேர் குற்றவாளிகள்:
இதையடுத்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரையும் கைது செய்தது கேரள போலீஸ். பின்னர், அவர் ஜாமினில் வந்தார். கடந்த 8 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் இன்று போதிய ஆதாரங்களுடன் திலீப் மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முதல் 6 பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் திலீப் 8வது குற்றவாளி ஆவார்.
பாதிக்கப்பட்ட நடிகை தரப்பு திலீப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்வோம் என்று தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் இதுவரை 251 நபர்களிடம் சாட்சியம் பெறப்பட்டுள்ளது. குற்றவாளிகளுக்கான தண்டனை என்னவென்று மாலை அறிவிக்கப்பட உள்ளது. இந்த வழக்கில் திலீப் 85 நாட்கள் சிறையில் இருந்தார். முக்கிய குற்றவாளியான பல்சர் சுனில் தொடர்ந்து சிறையிலே இருந்து வருகிறார்.
நன்றி சொன்ன திலீப்:
1992ம் ஆண்டு முதல் நடித்து வரும் திலீப் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நடிகையுடன் இணைந்து சிஐடி மூசா, ரன்வே, டிவென்டி20 என பல படங்களில் நடித்துள்ளார். இந்த வழக்கின் பல்வேறு விசாரணை தகவல்களும் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த சம்பவத்திற்கு பிறகும் தொடர்ந்து திலீப் நடித்து வருகிறார். தனக்கு ஆதரவாக இருந்தவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக திலீப் தெரிவித்துள்ளார்.