ராயன் படத்தைப் பற்றி தனுஷ்


என் முதல் படத்தில் நடிக்கும்போது சத்தியமாக நான் இவ்வளவு தூரம் வருவேன் என்று நினைக்கவில்லை. அவ்வளவு கிண்டல்களையும் , உருவகேலிகளையும் , அவமானங்கள் , துரோகங்களைத் தாண்டி இங்கே நிற்கிறேன் என்றால் அதற்கு உங்கள் கைதட்டல்கள் தான் காரணம். ஒல்லியாக கருப்பாக இருந்த என்னுடன் நீங்கள் எப்படி கனெக்ட் ஆனீர்கள் என்று தெரியவில்லை. ஆங்கிலம் பேசத் தெரியாத என்னை ஹாலிவுட்டில் நடிக்க வைத்தது நீங்கள்தான்.


ராயன் படத்தின் கதையை தயாரிப்பாளர் கலாநிதி மாறனிடம் சொன்னபோது அவர் முகத்தில் எந்த ரியாக்‌ஷனும் இல்லை. ஒருவேளை கதை நன்றாக இல்லையோ என்று எனக்கு சந்தேகம் வந்துவிட்டது. ஆனால் அவர் இந்த படத்தை பண்ணலாம் என்று சொன்னார்.


பிரகாஷ் ராஜ் பற்றி தனுஷ்


திருவிளையாடல் படத்தில் நடித்தபோது நான் பிரகாஷ் ராஜ் சாரை பார்த்து பயந்துகொண்டிருப்பேன். நான் ஒரு கதை எழுதி வருகிறேன் அதில் நீங்கள் நடிக்க வேண்டும், என்று அவரிடம் சொன்னேன்.  அதை எல்லாம் கேட்காமலேயே எப்போ வர வேண்டும் என்று சொல் வருகிறேன் என்றார். அவருக்கு இப்போது கண்ணில் ஆபரேஷன் நடந்திருக்கிறது. நான் வரவேண்டாம் என்று சொல்லியும் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறார்.


எஸ். ஜே சூர்யா பற்றி தனுஷ்


முதல் நாள் முதல் ஷாட் வைத்தபோது எஸ்.ஜே சூர்யா நீங்கள் ஏன் படம் எடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள் என்று கேட்டார். இவ்வளவு பெரிய ஸ்டாராக இருக்கிறீர்கள் , உங்களுக்கு என்று தனியாக ரசிகர்கள் இருக்கிறார்களே என்றார். முதல் நாளிலேயே இப்படி கேட்கிறீர்கள் என்று நினைத்தேன் ஆனால் அந்த கேள்வி என்னை இன்னும் கடினமாக உழைக்க வைத்தது.


அவர் அவ்வளவு பெரிய இயக்குநர். ஆனால் நான் என்ன சொன்னாலும் கேட்டாலும் முகம் சுழிக்காமல் அதை செய்து கொடுத்தார். 


அதேபோல் காளிதாஸ் , துஷாரா , சந்தீப் கிஷன் அபர்ணா பாலமுரளி எல்லாரையும் நான் பயங்கரமாக திட்டி வேலை வாங்கி இருக்கிறேன். ஆனால் அது எல்லாம் அவர்களுக்கு ஒரு நல்ல இடத்தைக் கொடுக்க வேண்டும் என்கிற நோக்கத்தில்தான்.


போயஸ் கார்டன் பற்றி தனுஷ்


போயஸ் கார்டனில் வீடு கட்டியது இவ்வளவு பெரிய சர்ச்சையாகும் என்று தெரிந்திருந்தால் நான் இந்த வீட்டை கட்டியிருக்கவே மாட்டேன். நான் யாருடைய ரசிகன் என்பது உங்களுக்குத் தெரியும். ரஜினி சாரின் வீடும் போயஸ் கார்டனில் தான் இருக்கிறது. எனக்கு 16 வயது இருக்கும்போது நான் போயஸ் கார்டன் தெருவுக்குச் சென்றேன். ரஜினி வீட்டைப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டு அங்கு இருந்த காவலர்களிடம் கெஞ்சி ரஜினி வீட்டை பார்த்தேன். பக்கத்திலேயே ஜெயலலிதாவின் வீடும் இருந்தது. நாமும் போயஸ் கார்டனில் ஒரு வீட்டை கட்ட வேண்டும் என்று அப்போது ஆசை வந்தது. அந்த விதை அன்று விழுந்தது. அந்த 16 வயது வெங்கடேஷ் பிரபுவுக்கு இந்த தனுஷ் கொடுத்த பரிசு தான் போயஸ் கார்டனில் நான் கட்டிய வீடு. நான் யார் என்று அந்த சிவனுக்குத் தெரியும். என் அம்மா அப்பாவிற்கு தெரியும். எல்லாவற்றுக்கும் காலம் பதில் சொல்லும் என்றார்