தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்றதில், திரைத்துறையில் கலைஞர் கருணாநிதியின் பங்களிப்பை பாராட்டும் விதமாக கலைஞர் 100 விழாவை பிரமாண்டமாக நடத்த முடிவு செய்யப்பட்டது. கடந்த மாதம் நடத்த திட்டமிடப்பட்டு இருந்த சமயத்தில் மிக்ஜாம் புயல் கனமழையால் சென்னை பெரிய அளவில் பாதிப்பை சந்தித்தது. அதனால் இந்த விழா ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் “கலைஞர் 100” விழா நேற்று சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் இந்த விழாவானது நடைபெற்றது.
கடந்த ஆண்டு ஜூன் 3ம் தேதி முதல் கலைஞரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ் திரையுலகிற்கு முத்தமிழ் கலைஞர் கருணாநிதி ஆற்றிய பெரும் தொண்டை கருத்தில் கொண்டு அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் இந்த நூற்றாண்டு விழா நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ரஜினிகாந்த், கமல்ஹாசன், தனுஷ், சூர்யா, நயன்தாரா, இயக்குநர் வெற்றிமாறன், கார்த்தி, சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் கலந்து கொண்டு கலைஞரின் அருமை பெருமைகளை பற்றி பேசி புகழாரம் சூட்டினார்கள்.
அந்த வகையில் நடிகர் தனுஷ் இந்த விழாவில் கலந்து கொண்டு பேசுகையில் "முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஐயா அவர்களின் இந்த நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி. கலைஞரின் அரசியல், சினிமா சாதனை குறித்து பேச எனக்கு வயதோ அனுபவமோ இல்லை. அவரை நான் ஒரு படத்தின் பூஜையின்போது தான் சந்தித்தேன். அப்போது அவர் என்னை பார்த்து 'வாங்க மன்மதராஜா' என என்னை அழைத்தார்.
அவரின் மறைவை பற்றி பேசினால் தான் அவர் மறைந்து விட்டார் என்பதே நினைவுக்கு வருகிறது. அது வரையில் அவர் இருப்பதாக தான் நான் நினைக்கிறன்.
கலியன் பூங்குன்றனார் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் "யாதும் ஊரே, யாவரும் கேளிர்" என சொன்னார் அதற்கு பிறகு கலைஞர் 'நான் என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது, நாம் என்று சொன்னால் உதடுகள் ஒட்டும்'. நாமாக வாழ்ந்தால் தான் நலமாக வாழ முடியும் என்று சொன்னவர் கலைஞர்.
கலைஞரை போலவே நம்முடைய முதல்வரும் மிகவும் எளிமையானவராக, எந்நேரமும் அணுக கூடியவராக நம்மில் ஒருவராக இருப்பதை பார்க்கும் போது மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது. என்னுடைய அசுரன் படத்தை பார்த்துவிட்டு எனக்கு போன் செய்து வாழ்த்தினார். அப்போது அவர் என்னை பிரதர் என அழைத்தார். அவரின் அந்த எதார்த்தமான அணுகுமுறை எனக்கு மிகவும் பிடித்தது” என பேசி இருந்தார் தனுஷ்.