இயக்குநர் ஹரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான வேங்கை படம் வெளியாகி இன்றோடு 12 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. 


தமிழ் சினிமாவில் பட்டாசாய் வெடிக்கும் திரைக்கதை, பறக்கும் டாடா சுமோக்கள் என அக்மார்க் ஆக்‌ஷன் படம் எடுக்கும் இயக்குநர்களில் முதன்மையானவர் ஹரி. இவர் 2011 ஆம் ஆண்டு தனுஷூடன் முதல்முறையாக வேங்கை படத்தில் இணைந்தார். இந்த படத்தில் தமன்னா, ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், ஊர்வரி, கஞ்சா கருப்பு என பலரும் நடித்திருந்தனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்த இப்படம் ரசிகர்களை கவர்ந்தது. 


படிக்காதவன் படத்தை தொடர்ந்து தனுஷூடன் 2வது முறையாக தமன்னா வேங்கை படத்தில் ஜோடி சேர்ந்தார். இதேபோல் தாமிரபரணி படத்திற்கு பிறகு விஜயா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்துக்கு ஹரி 2வதாக படம் இயக்கியிருந்தார். 


படத்தின் கதை 


சிவகங்கை மாவட்டத்தை மையமாகக் கொண்ட இந்த படத்தில் முக்கியமானவர் ராஜ்கிரண். அவரின் தயவால் பிரகாஷ்ராஜ் எம்.எல்.ஏ. ஆகிறார். ஒரு கட்டத்தில் தவறான வழியில் செல்லும் பிரகாஷ்ராஜை ராஜ்கிரண் அனைவரது முன்னிலையிலும் அவமானப்படுத்துகிறார். இதற்கு பிரகாஷ்ராஜ் பழிவாங்க நினைக்கிறார். இதனிடையே தனுஷின் காதலியாக வரும் தமன்னாவும் ராஜ்கிரணை கொல்ல நினைக்கிறார். இதனை அவரது மகனாக வரும் தனுஷ் எப்படி தடுக்கிறார் என்று பழைய கதையை விறுவிறுப்பு குறையாமல் சொல்லியிருந்தார் ஹரி. 


படத்தின் பல காட்சிகள் திருச்சியின் அழகை அழகாக காட்டியிருந்தது.விறுவிறு திரைக்கதையால் ரசிகர்களை சலிப்படையாமல் செய்திருந்தார் ஹரி. காதல், அன்பு, காமெடி, வில்லத்தனம் என முழுக்க முழுக்க சீறியது ‘வேங்கை’ படம். இந்த படத்திற்கு முதலில் ‘அருவா’ என பெயர் வைக்க முடிவு செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இந்த படம் பாக்ஸ் ஆபீஸில் நல்ல கலெஜ்ஷனைப் பெற்றது. 


முணுமுணுக்க வைத்த பாடல்கள் 


தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் பாடல்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்தது. குறிப்பாக என்ன சொல்லப் போற, ஒரே ஒரு வார்த்தைக்காக பாடல்கள் இன்றும் பலரின் பேவரைட் ஆக உள்ளது. அதேபோல் கஞ்சா கருப்பின் சைக்கிள் பெண்ட் எடுக்கும் காட்சிகள் முகச்சுழிப்பை ஏற்படுத்தியிருந்தாலும் சிரிப்பலையை வரவைத்தது. வழக்கமான ஹரியின் கமர்ஷியல் படம் என்றாலும் வேங்கை அனைவரும் ரசிக்கும் படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.