நடிகர் தனுஷ் நடிப்பில் மிகப்பெரிய வெற்றியை அவரது சினிமா கேரியரில் பெற்றுக் கொடுத்த ‘வேலையில்லா பட்டதாரி’ படம் இன்றோடு 9 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. 


விஐபி தனுஷ்  


2011 ஆம் ஆண்டு தனுஷ் தேசிய விருது வாங்கிய ‘ஆடுகளம்' படம் வெளியானது. அதன்பிறகு அவர் நடித்த மாப்பிள்ளை, மயக்கம் என்ன, வேங்கை, 3, மரியான், நையாண்டி என அனைத்தும் அடுத்தடுத்து தோல்வியை தழுவியது. இந்த இடைப்பட்ட காலத்தில் நடிகராக இருந்த தனுஷ்,  தயாரிப்பாளராக, பாடலாசிரியராக உயர்ந்திருந்தார். இப்படியான நிலையில் தான் 2014 ஆம் ஆண்டு ‘வேலையில்லா பட்டதாரி’ படம் வெளியானது. 


ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இப்படத்தின் மூலம் இயக்குநரானார். இந்த படத்தில் தனுஷ், அமலாபால்,சமுத்திரகனி, சரண்யா பொன்வண்ணன், சுரபி,விவேக் என பலரும் நடித்திருந்தனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். 


படத்தின் கதை 


சிவில் இன்ஜினீயரிங் பட்டதாரியான தனுஷூக்கு கல்விக்கும் திறமைக்கும் ஏற்ற வேலை கிடைக்காமல் உள்ளது. சம்பந்தமே இல்லாமல் கால் சென்டரில் பணியாற்றுகிறார். அவரது தம்பி ஐடி நிறுவனத்தில் கை நிறைய சம்பாதிக்கிறார். தனுஷூக்கு வீட்டில் அப்பா சமுத்திரகனியுடன் அடிக்கடி மோதல் ஏற்பட, அம்மா சரண்யா தான் சப்போர்ட்டாக இருக்கிறார். அப்படியே பக்கத்து வீட்டு அமலா பாலுடன் காதலும் செல்கிறது. இதனிடையே தனுஷின் அலட்சியத்தால் சரண்யா இறக்கிறார். இதனால் குற்ற உணர்ச்சியுடன் மன உளைச்சலுக்கு ஆளாகும் தனுஷ் அதிலிருந்து மீண்டு, எதிர்பார்த்த நிலையை எப்படி அடைந்தார் என்பதே இப்படத்தின் கதையாகும். 



இன்ஜினீயரிங்  பட்டதாரிகளுக்கு சமர்ப்பணம்


இந்த படம் உண்மையில் வெற்றிப் பெற காரணம், சமூகத்தில் ஒரு படிப்பு படித்து விட்டு, ஏதோ ஒரு வேலையை பார்க்கும் பட்டாதாரிகளின் நிலையை பதிவு செய்திருந்தது தான். குறிப்பாக இன்ஜினீயரிங்  படித்து விட்டு வேறு துறைகளில் பணியாற்றுவதால் கிடைக்கும் அவமானங்கள், கஷ்டத்தை படம் பிடித்த முதல் தமிழ்த் திரைப்படம் என்பதால் அனைவரும் இப்படத்துடன் தங்களை இணைத்துக் கொண்டனர். 


ரகுவரனாக தனுஷ், கார்த்திக்காக அவர் தம்பி என அங்கேயே தொடங்கி விடும் ஏற்ற இறக்கங்கள். சீரியஸான விஷயத்தை கதையாக எடுத்தாலும் காதல், காமெடி, சென்டிமென்ட், ஆக்‌ஷன் காட்சிகள் என மிரட்டியிருந்தார் வேல்ராஜ்.  அம்மா - மகன் சென்டிமென்ட் காட்சிகள்,  தனுஷ்-அமலா பால் லவ் கெமிஸ்ட்ரி, விவேக்கின் தங்க புஷ்பம் காமெடி, வில்லன்களுடன் ஃபைட் காட்சிகள் என தொடக்கம் முதல் இறுதி வரை நல்ல பொழுதுபோக்காக அமைந்தது.


பாடல்களில் மாஸ் காட்டிய அனிருத் 


வேலையில்லா பட்டதாரி படத்தின் வெற்றிக்கு இசையும் பாடல்களும் மிகப்பெரிய அளவில் உதவியது. குறிப்பாக அம்மா அம்மா  பாடல் மனதை உருக வைத்தது. தனுஷ் எழுதிய பாடல் வரிகள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. படத்தின் தீம் மியூசிக், தனது தயாரிப்பு நிறுவன லோகோ வரும் போது ஒலிக்கும் அளவுக்கு தனுஷின் அடையாளமாக மாறிப்போனது. 


வசூலில் நூறு கோடிக்கும் மேல் அள்ளிய வேலையில்லா பட்டதாரி தெலுங்கில் 'ரகுவரன் பி.டெக்’ என்ற பெயரிலும், பிரகஸ்பதி என்ற பெயரில் கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி பெற்றது. தொடர்ந்து வேலையில்லா பட்டதாரி 2 வெளியானது குறிப்பிடத்தக்கது.