நடிகர் தனுஷ் நடித்து வரும் கேப்டன் மில்லர் படத்தின் டீசர் ஜூலை 28 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சத்யஜோதி நிறுவனம் தயாரிப்பில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ், ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கும் இப்படத்தில் பிரியங்கா அருள்மோகன், கன்னட ஸ்டார் சிவராஜ் குமார், சந்தீப் கிஷன், நிவேதிதா, ஜான் கொக்கென் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
தொடரி, பட்டாஸ், மாறன் ஆகிய படங்களை தொடர்ந்து 4வது முறையாக தனுஷ் இப்படத்தில் சத்யஜோதி நிறுவனத்துடன் இணைந்துள்ளார். கேப்டன் மில்லர் படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாகி வருகிறது. இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தென்காசி மாவட்டத்தில் உள்ள மத்தளம்பாறை கிராமத்தில் நடந்த போது மிகப்பெரிய சர்ச்சைகளை சந்தித்தது. முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் இடைப்பட்ட பகுதியான இந்த ஊடத்தில் உயர் பீம் லைட்டுகள், தீப்பற்றுவது, குண்டு வெடிப்பது தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டது. இதனால் வனவிலங்குகள் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்தது.
இதனிடையே கடந்த ஜூன் 30 ஆம் தேதி கேப்டன் மில்லர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. வரலாற்று கால கதையை அடிப்படையாக கொண்ட இப்படத்தின் கதை மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நடிகர் தனுஷ் பிறந்த நாள் ஜூலை 28 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை மேலும் சிறப்பிக்கும் வண்ணம் கேப்டன் மில்லர் படத்தின் டீசர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.