தனுஷ்


தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் கடந்த ஜூலை 29 ஆம் தேதி திடீர் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. உயர்ந்து வரும் நடிகர்களின் சம்பளம், திரைப்படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகும் கால வரையறை ஆகியவற்றை முடிவு  செய்ய இருப்பதால் ஆகஸ்ட் 16 முதல் புதிய படப்பிடிப்புகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்க தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்தது. மேலும் இந்த அறிக்கையில் நடிகர் தனுஷ் இனி புதிதாக நடிக்கும் படங்களுக்கு தயாரிப்பளர் சங்கத்துடன் கலந்தாலோசிக்க வேண்டும் என்று இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டது. தயாரிப்பாளர் சங்கத்தின் இந்த திடீர் முடிவுக்கு நடிகர் சங்கத்தின் பொருளாளர் கார்த்தி தனது எதிர்ப்பை தெரிவித்திருந்தார். 


தனுஷூக்கு ஏன் ரெட் கார்ட் ?


தேனாண்டாள் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் நடிகர் தனுஷ் நடிக்க ஒத்துக்கொண்டு படப்பிடிப்பிற்கு கால்ஷீட் கொடுக்காத காரணத்தினால் அவருக்கு ரெட் கார்ட் வழங்கப்பட்டது. ஆனால் தனுஷ் மீதான இந்த புகார் குறித்து தயாரிப்பாளர் சங்கம் நடிகர் சங்கத்துடன் கலந்தாலோசிக்காமல் அவருக்கு ரெட் கார்ட் வழங்கியது தவறு என நடிகர் கார்த்தி உட்ப்ட நடிகர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தார்கள். 


தனுஷ் மீதான ரெட் கார்டை திரும்பபெற்றது தயாரிப்பாளர் சங்கம்






தற்போது வெளியாகி இருக்கும் தகவலின் படி தனுஷ் மீதான ரெட் கார்டை தயாரிப்பாளர் சங்கம் திரும்பப் பெற்றுள்ளது. தேனாண்டாள் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் நடிகர் தனுஷ் ஒரு படத்தில் நடித்து தருவார் என்றும் மற்றொரு தயாரிப்பாளரிடம் இருந்து தான் பெற்ற அட்வான்ஸ் பணத்தை வட்டியுடன் திரும்பித் தருவார் என்று தனுஷ் சார்பாக உறுதியளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 


அருண் விஜய் படத்தை இயக்கும் தனுஷ்


தனுஷ் தற்போது நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தை இயக்கி வருகிறார். பவர் பாண்டி , ராயன் படங்களுக்குப் பின் இது அவர் இயக்கும் மூன்றாவது படமாகும். இதனைத் தொடர்ந்து தனுஷ் நடிகர் அருன் விஜயை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை ஆகாஷ் தயாரிக்க இருக்கிறார்.