ராயன்


தனுஷின் 50 ஆவது படமாக உருவாகியுள்ளது ராயன். இப்படத்தை தனுஷ் இயக்கி அவரே நாயகனாக நடித்துள்ளார். காளிதாஸ் ஜெயராம் , சந்தீப் கிஷன் , செல்வராகவன் , பிரகாஷ் ராஜ் , எஸ்.ஜே சூர்யா , அபர்ணா பாலமுரளி , துஷாரா விஜயன் , பிரகாஷ் ராஜ் , வரலட்சுமி சரத்குமார் , சரவணன் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஏ.ஆர் ரஹ்மான் படத்திற்கு இசையமைத்துள்ளார். ஒம் பிரகாஷ்  ஒளிப்பதிவும் ஜாக்கி கலை வடிவமைப்பும் செய்துள்ளார்கள். வரும் ஜூலை 26 ஆம் தேதி ராயன் படம் திரையரங்குகளில்  வெளியாக இருக்கிறது. 


குலதெய்வத்தை வழிபட்டு வந்த தனுஷ்


வடசென்னையை மையப் படுத்திய ஆக்‌ஷன் திரில்லர் படமாக உருவாகி இருக்கும் ராயன் படம் தமிழ் , இந்தி , தெலுங்கு , மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது. படம் வெளியாக இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் நடிகர் தனுஷ் இன்று தனது குடும்பத்துடன் குலதெய்வ கோயிலுக்கு சென்று வழிபட்டு வந்தார். தனது சொந்த ஊரான தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள முத்துரங்காபுரம் கிராமத்தில் நடிகர் தனுஷின் குலதெய்வமான கஸ்தூரி அம்மாள் மங்கம்மாள் கோயிலில் குடும்பத்தினருடன் வழிபாடு செய்தனர். இந்தக் கோயில் புனரமைப்பு பணிக்கு நடிகர் தனுஷின் தந்தையும் இயக்குனருமான கஸ்தூரிராஜா பெரிய நிதி உதவி கொடுத்து உள்ளார். இந்தக் கோயிலின் கும்பாபிஷேகம் கடந்த மாதம் நடைபெற்றது.


ராயன் படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி






தனுஷின் கரியரில் மிகப்பெரிய ஒப்பனிங் ராயன் படத்திற்கு கிடைக்கும் என்று படத்திற்கான முன்பதிவுகள் வேகத்தை கணக்கிட்டு சினிமா ஆர்வலர்கள் கூறிவருகிறார். ரசிகர்களின் உற்சாகத்தை மேலும் அதிகரிக்கும் விதமாக ராயன் படத்திற்கான சிறப்பு காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி ஜூலை 26 ஆம் தேதி ஒரு நாள் மட்டும்  காலை 9 மணி முதல் அடுத்த நாள் அதிகாலை 2 மணி வரை ஐந்து காட்சிகளை திரையிட திரையரங்குகளுக்கு அனுமதி வழங்கப் பட்டுள்ளது. இதனால் தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.