தான் இயக்கி நடிக்கும் 50வது படத்தின் ஷூட்டிங் முடிந்து விட்டதாக நடிகர் தனுஷ் எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
2002 ஆம் ஆண்டு துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் தனுஷ். இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் வாரிசு என்ற அடையாளத்துடன் அறிமுகமான அவர் தனக்கென தனி இடத்தை திரையுலகில் உருவாக்கி விட்டார். நடிப்பு மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பல திறமைகளை வெளிப்படுத்தி தனுஷ் அசத்தியுள்ளார். மேலும் நடிகர் ராஜ்கிரண் மற்றும் நடிகை ரேவதியை முதன்மை கேரக்டர்களாக கொண்டு “பவர் பாண்டி” என்ற படத்தை இயக்கியிருந்தார்.
இந்த படம் 2017 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தில் தனுஷ் கேமியோ கேரக்டரில் நடித்திருந்தார். இந்த நிலையில் தற்போது அவர் “கேப்டன் மில்லர்” படத்தில் நடித்து வருகிறார். அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள இந்த படம் 2024 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகவுள்ள நிலையில் சத்தமே இல்லாமல் நடிகர் தனுஷ் சம்பவம் ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.
அதாவது தனது 50வது படத்தை தானே இயக்கி நடித்து வந்தார் தனுஷ். இதற்காக மொட்டை போட்டுக் கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் இந்த படத்தில் துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடித்து வருகின்றனர். வில்லனாக இசையமைப்பாளர் தேவாவிடம் பேசப்பட்டதாக கூறப்பட்டது.இப்படியான நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து விட்டதாக எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் தனுஷ் தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில், “தனுஷ் 50 படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து விட்டது. ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். மேலும் எனது பார்வையில் படம் உருவாக உறுதுணையாக இருந்த கலாநிதி மாறன் சார் மற்றும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு நன்றி” என தெரிவித்துள்ளார். ஆக 2024 ஆம் ஆண்டு தனுஷ் ரசிகர்களுக்கு கொண்டாட்டமான வருடமாக அமையப் போகிறது என்பதில் எந்த சந்தேகமுமில்லை.