தமிழ் திரையுலகின் மிகவும் பிரபலமான நடிகர் தனுஷ். சாலிகிராமத்தில் தான் பயின்ற பள்ளியில் இவர் புதிய கட்டிடங்களை கட்டித் தந்துள்ளார். அந்த கட்டிடத்தின் திறப்பு விழாவில் தாய் மொழியின் முக்கியத்துவம் குறித்து பேசியுள்ளார். அதில் அவர் பேசியதாவது,
ஆங்கிலம் பேச வராது:
நான் இங்கு படிக்கும்போது ஆங்கிலம் பேச வராது. தப்பு, தப்பாக ஆங்கிலம் பேசுவேன். ஆனால், தமிழ் நன்றாக வரும். இப்போது அப்படியே மாறிவிட்டது. நான் வெளியில் சந்திக்கிறேன். 10ல் 8 பேருக்கு தமிழ் எழுத தெரியவில்லை. ஆங்கிலம் பேசுகிறார்கள், எழுதுகிறார்கள். தமிழ் எழுதத் தெரியவில்லை, படிக்கத் தெரியவில்லை.
நான் ஒரு ஃப்ரெஞ்ச் தயாரிப்பு நிறுவனத்தில் படம் ஒன்று பண்ணினேன். பெல்ஜியமில் படப்பிடிப்பு நடத்தினோம். அங்கே அவர்கள் எனக்கு ஆங்கிலம் தெரியுமா? என்று கேட்டபோது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. நம் ஊரில் ஒருவருக்கு ஆங்கிலம் தெரியவில்லை என்றால்தான் கிண்டல் செய்வார்கள். அவர்கள் ஊரில் ஆங்கிலம் தெரிந்தால் ஆச்சரியமாக பார்க்கிறார்கள்.
அவமானம்:
ஏன் இப்படி ஆச்சரியப்படுகிறீர்கள்? என்றேன். உங்களுக்கு உங்கள் தாய்மொழி தெரியும். ஆங்கிலம் ஒரு போனஸ்தானே. உங்களுக்கு உங்கள் தாய்மொழிதான் முதலில் தெரிய வேண்டும். தாய்மொழியை எழுத படிக்கத் தெரிந்து கொள்ள வேண்டும். தமிழ் வரவில்லை என்று கூறுவது பெருமை அல்ல. தாய்மொழி தெரியவில்லை என்றால் அவமானம்தான்.
தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். என் தமிழ் ஆசிரியை சித்ராவை நினைத்துக்கொள்கிறேன். தயவு செய்து தமிழில் நன்றாக கவனம் செலுத்த வேண்டும். இந்த கேம்பஸ் இன்னும் பெரியதாக வேண்டும். உங்கள் பெயரில் ஒரு கட்டிடம் இருக்க வேண்டும். அப்போதும் நான் அதைப் பார்த்து ரசிக்க வேண்டும். நன்றாக படிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
சமீபத்தில் தனது பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகளை வழங்கிய தனுஷ் அந்த நிகழ்ச்சியில் பேசியது அனைவரையும் கவனிக்க வைத்தது. அரசியல் மீது தனுஷிற்கு இருக்கும் ஆர்வத்தின் வெளிப்பாடாகவே அந்த விவகாரம் கருதப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பிறகு தனுஷின் செயல்பாடுகள் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.
