நடிகர் டேனியல் பாலாஜியின் கண்கள் தானம் செய்யப்பட்டு, அவரது உடல் அஞ்சலிக்காக புரசைவாக்கம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு ஓட்டேரி மின் மயானத்தில் டேனியல் பாலாஜி உடல் தகனம் செய்யப்படுகிறது. 


என்ன நடந்தது..?


 நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பு காரணமாக நேற்று இரவு 11.30 மணியளவில் உயிரிழந்தார். இவரின் மறைவு திரையுலகினர் மற்றும் திரைப்பட ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு நடிகர் டேனியல் பாலாஜிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இவரை உடனே அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,  யாரும் எதிர்பார்க்காத வகையில் சிகிச்சை பலனின்றி டேனியல் பாலாஜி உயிரிழந்தார். தற்போது, இவருக்கு 48 வயது மட்டுமே ஆகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. 


பாலாஜி, டேனியல் பாலாஜியாக மாறியது எப்படி..? 


90 காலக்கட்டத்தில் பிரபல சன் டிவியில் ஒளிபரப்பான சித்தி நாடகத்தில் அறிமுகமானார் டேனியல் பாலாஜி. அதன்பிறகு, சின்னத்திரையில் இருந்து படிப்படியாக உயர்ந்து சினிமாவில் வளர தொடங்கி கமலஹாசன், விஜய் என முன்னணி நடிகர்களுடன் நடிக்க தொடங்கினார். இவர் மறைந்த நடிகர் முரளிக்கு தம்பிமுறை ஆவார்.


சென்னையில் உள்ள தரமணி திரைப்பட நிறுவனத்தில் படிப்பை முடித்த பாலாஜி, அதற்குப் பிறகு கமல்ஹாசனின் படத்தில் யூனிட் புரொடக்ஷன் மேனேஜராக தனது பயணத்தை சினிமாவில் தொடங்கினார். சண்டிவியில் ஒளிபரப்பான நடிகை ராதிகாவின் ’சித்தி’ தொடரில் இவருக்கு ஒரு சிறிய கதாபாத்திரம் கிடைத்தது அதில் இவருடைய பெயர் டேனியல். அதற்குப் பிறகே இவருடைய பெயர் டேனியல் பாலாஜி என மாற்றம் கொண்டது. 


வில்லன் நடிகராக வெறித்தனம்: 


ஸ்ரீகாந்த் மற்றும் சினேகா நடிப்பில் வெளியான ’ஏப்ரல் மாதத்தில்; என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார் டேனியல் பாலாஜி. அதற்குப் பிறகு காதல் கொண்டேன் திரைப்படத்தில் காவல் அதிகாரியாக நடித்து தனது முகத்தை தமிழ் ரசிகர்களின் மனதில் பதித்தார். 


தொடர்ந்து, இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘காக்க காக்க’, ’வேட்டையாடு விளையாடு’ உள்ளிட்ட படங்களில் நடித்து தனது நடிப்பு திறனை வெளிப்படுத்தினார். அதிலும் குறிப்பாக ‘வேட்டையாடு விளையாடு’ திரைப்படத்தில் உலகநாயகன் கமல்ஹாசனுக்கு நிகராக நடித்திருப்பார் டேனியல் பாலாஜி.


இந்த படத்தில் இவரது வில்லத்தனம் தமிழ் சினிமாவில் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து, வெற்றிமாறன் இயக்கிய முதல் திரைப்படமான பொல்லாதவன் திரைப்படத்தில் மெயின் வில்லனாகவும், நடிகர் விஜய்யோடு சேர்ந்து பைரவா பிகில் போன்ற படங்களில் நடித்தார். மேலும், தமிழ் மட்டுமல்லாது பல மலையாள திரைப்படங்களிலும் நடித்து நல்ல நடிகன் என்ற பெயரை பெற்றார். 


முன்னணி இயக்குநர்கள் நேரில் அஞ்சலி: 






புரசைவாக்கம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள மறைந்த நடிகர் டேனியல் பாலாஜி உடலுக்கு இயக்குநர்கள் அமீர், வெற்றிமாறன் மற்றும் கெளதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.