தன்னுடைய இயல்பை யாருக்காகவும் மாற்றிக்கொள்ள வேண்டாம் என்று சிரஞ்சீவி, விஜய் தேவரகொண்டாவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.


விஜய் தேவரகொண்டா


 நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் மிருணால் தாக்கூர் இணைந்து தெலுங்கில்  நடித்துள்ள ஃபேமிலி ஸ்டார் படம் வரும் ஏப்ரல் 5 ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தெலுங்கு டிஜிட்டல் மீடியா அமைப்பு நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் தெலுங்கு சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் விஜய் தேவரகொண்டா கலந்துகொண்டு உரையாடினார்கள். இந்த உரையாடலில் சிரஞ்சீவி தனது இளமைக் காலத்தைப் பற்றிய பல்வேறு அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். மேலும் விஜய் தேவரகொண்டாவுக்கு அவர் சில ஆலோசனைகளையும் வழங்கினார்.


சூப்பர்ஸ்டார் ஆக உறுதி எடுத்த தருணம்


தெலுங்கு சினிமாவின் சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படும் சிரஞ்சீவி தான் சூப்பர்ஸ்டார் ஆக வேண்டும் என்று உறுதி எடுத்த தருணத்தை விஜய் தேவரகொண்டாவிடம் பகிர்ந்துகொண்டார். “ நான் ஜூனியர் ஆர்டிஸ்டாக நடித்துக் கொண்டிருந்தபோது அங்கு இருந்த பிரபல நடிகர்கள் ‘ உனக்கு என்ன மனதில் சூப்பர்ஸ்டார் என்று நினைப்பா” என்று அனைவரது முன்னால் வைத்து அவமானப்படுத்தினார்கள். அவர்கள் என்னை அப்படி அவமானப்படுத்தியது பிடிக்கவில்லை. சூப்பர்ஸ்டார் ஆக வேண்டும் என்று அந்த தருணத்தில் நான் முடிவு செய்தேன். அப்போதிருந்து நான் எவ்வளவு கடுமையாக உழைத்திருக்கிறேன் என்று யாருக்கும் தெரியாது. அந்த அவமானத்தை நான் என்னுடைய உந்து சக்தியாக பயன்படுத்தினேன் “ என்று சிரஞ்சீவி கூறியுள்ளார். 


முதல் படத்தில் ரொம்ப பயந்தேன்


 நடிகர் விஜய் தேவரகொண்டா பேசியபோது ‘ என்னுடைய முதல் இரண்டு படங்களை நான் இன்று திரும்பி பார்க்கும் போது நான் எவ்வளவு பயப்பட்டிருக்கிறேன் என்பதை என்னால் பார்க்க முடிகிறது. ஆனால் நான் அப்படி பயந்திருக்க தேவையே இல்லை, அர்ஜூன் ரெட்டி படத்தை பார்க்கும் போது நான் என்னை இளமையாகவும் துணிச்சலான ஒருவனாகவும் உணர்ந்தேன். ” என்று கூறினார்.


நடிகர் சீரஞ்சிவி அர்ஜூன் ரெட்டி படத்தின் போது தான் விஜய் தேவரகொண்டா பேசியதை பார்த்ததாகவும் விஜய் தேவரகொண்டாவின் தைரியம் தன்னை கவர்ந்ததாகவும் கூறினார். தன்னுடைய சுபாவத்தை யாருக்காகவும் மாற்றிக் கொள்ள வேண்டாம் என்றும் நம்முடைய பலத்தை தெரிந்து வைத்திருப்பது அவசியம். அது தான் தன்னை இத்தனை ஆண்டுகள் வெற்றிகரமான நடிகராக வைத்திருப்பதாக விஜய் தேவரகொண்டாவுக்கு ஆலோசனை வழங்கினார் 


தீர்ந்த ஷாம்பு பாட்டிலை பயன்படுத்துவேன்


தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை முறையைப் பற்றி பேசிய விஜய் தேவரகொண்டா “ என்னுடைய வாழ்க்கை மாறியிருந்தாலும் என மனம் இன்னும் அதே மிடில் கிளாஸ் பையனாக தான் இருக்கிறது. ஷாம்பு பாட்டில் தீர்ந்த பின் அதில் கொஞ்சம் தண்ணீர் விட்டு குளிக்கும் ஒருவனாக தான் நான் இன்னும் இருக்கிறேன்” என்று கூறினார்.


அதே நேரத்தில் சிரஞ்சீவி “ நானும் சோப்பு கரைந்துவிட்டால் சின்ன சின்ன துண்டுகளை ஒன்று சேர்ந்து அதை இன்னும் ஒரு வாரத்திற்கு பயன்படுத்தும் பழக்கம் என்னிடம் இருக்கிறது. எங்கள் வீட்டில் நான் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவதில் கவனமாக இருப்பேன். சமீபத்தில் ராம் சரண் அவர் வீட்டில் லைட்டை எல்லாம் போட்டுவிட்டு வெளி நாட்டிற்கு சென்றுவிட்டார். நான் தான் அதை எல்லாம் அனைத்துவிட்டு வந்தேன்” என்று அவர் கூறினார்.