திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர் ஜெகநாதனுக்கு காலணி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் காலணியை மாலையாக அணிந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 


நாடாளுமன்ற தேர்தல் 


இந்திய பாராளுமன்றத் தேர்தல் 2024 முன்னிட்டு திருவண்ணாமலை  பாராளுமன்றத் தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் 20.03.2024-இல் தொடங்கி 27.03.2024-ஆம் நாளன்று நிறைவுற்றது. திருவண்ணாமலை பாராளுமன்றத் தொகுதிக்கு 42 நபர்களிடமிருந்து 49 வேட்பு மனுக்களும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் தொகுதிகளுக்கு வேட்பு மனுக்களை 28.03.2024 அன்று கூறாய்வு பரிசீலனை செய்யப்பட்டு திருவண்ணாமலை பாராளுமன்றத் தொகுதியில் வரப்பெற்ற 49 வேட்பு மனுக்களில் கூடுதல் மனுக்கள் மற்றும் பிற காரணங்களால் 12 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 37 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது. இதில் வேட்பு மனுக்களை திரும்பப்பெற 30.03.2024 பிற்பகல் 3.00 மணிவரை கால அவகாசம் வழங்கப்பட்டதை தொடர்ந்து திருவண்ணாமலை பாராளுமன்றத் தொகுதியில் 6 வேட்பு மனுக்கள் திரும்ப பெறப்பட்டு 31 வேட்பு மனுக்கள் இறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.




சுயேட்சை வேட்பாளர்  காலணியை மாலையாக அணிந்து வாக்கு சேகரிப்பு 


அப்போது சுயாட்சி வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டது. அதில் 3 வேட்பாளர்கள் ஒரே சின்னத்தை கேட்டனர். அதற்கு தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வேட்பர்களிடம் யார் முதலில் வேட்புமனு தாக்கல் செய்தர்களோ அவர்களுக்கு முதலுரிமை கொடுக்கப்பட்டு அவர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டது. அதன் பிறகு வேட்பாளர்களுக்கு அடையாள அட்டைகளை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அளித்தார். மேலும், வேட்பாளர்களுக்கு தேர்தல் குறித்த புத்தகங்களையும் வழங்கினார். இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் கடலாடி பகுதியை சேர்ந்த பால் வியாபாரி சுயேட்சை வேட்பாளர் ஜெகநாதன் வேட்பு மனு தாக்கல் செய்ய வரும்போதே தலையில் வேட்புமனுக்களை சுமந்தவாரு தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார் . சுயேட்சை வேட்பாளர் ஜெகநாதனுக்கு காலணி சின்னத்தை தேர்தல் அதிகாரி ஒதுக்கீடு செய்து, வேட்பாளர்களுக்கான அடையாள அட்டை பெற்றுக்கொண்டு ஒதுக்கப்பட்ட சின்னமான காலணி சின்னத்தை மாலையாக கோர்த்து தனது கழுத்தில் அணிந்து கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 




இதுகுறித்து வேட்பாளர் ஜெகநாதன் பேட்டியளிக்கையில்;


அனைவரும் ஒதுக்கக்கூடிய காலணி சின்னத்தை நான் ஏன் தேர்ந்தெடுத்தேன் என்றால், அனைத்து மக்களிடையே எளிய முறையில் சென்றடையும் என்பதற்காகவும், அனைத்து பகுதிகளிலும் சென்று என்னால் வாக்கு சேகரிப்பில் ஈடுபடமுடியாததாலும் அனைத்து மக்களும் எளியமுறையில் அறியக்கூடிய சின்னமாக நான் தேர்ந்தெடுத்தேன். நான் வெற்றி பெற்றால் என்னுடைய சின்னமான காலணியை போல் மக்களுக்காக உழைப்பேன். தற்போது நேரடியாக திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் சென்று வாக்கு சேகரிப்பேன், மேலும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபடப்போகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்நிகழ்வில் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பொது மேற்பார்வையாளர் மகாவீர் பிரசாத் மீனா  அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.