கமலின் மகாநதி படத்தில் உதவி இயக்குநராக வேலைப் பார்த்த இயக்குநர் சேரன் அப்படத்தில் கமலுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வெளியேறியிருந்தார் என்பது பலருக்கும் தெரியாத தகவல். அதற்கு என்ன காரணம் என்பதை சேரன் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 


மகாநதி:


1994 ஆம் ஆண்டு சந்தானபாரதி இயக்கத்தில் வெளிவந்த மகாநதி படத்தில் கமல்ஹாசன், சுகன்யா, கொச்சின் ஹனீஃபா, பூர்ணம் விஸ்வநாதன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்திருந்த இப்படத்தின் கதை, திரைக்கதையை கமலே எழுதியிருந்தார்.


நடுத்தர வர்க்கத்தின் சார்ந்த ஒரு மனிதனின் ஆசையைப் புரிந்துகொண்டு, அவனை நம்பவைத்து ஒருவன் ஏமாற்றுகிறான். இதனால் அவன் படுகிற படாதபாடுகள் தான் மகாநதி படத்தின் கதையாகும். பணமோசடியால் கமல் ஜெயிலுக்குள் போக, அவரது மகள் விபச்சார விடுதியில் விற்கப்படுகிறார். மகனும் காணாமல் போக, இருவரையும் தேடிக் கண்டுபிடிக்கிறார். இத்தனைக்கும் காரணமானவர்களை அவர் எப்படி பழிவாங்கினார் என்பதை பார்க்கும் நமக்குள் ஒரு பதற்றத்தை கமல் ஏற்படுத்தியிருப்பார். குறிப்பாக மகளை மீட்கும் காட்சியில் கண்கலங்க வைத்திருப்பார். படமும் காவிரியில் தொடங்கி சென்னை கூவம் வழியாக கங்கை நதிக்கரையில் முடிக்கப்பட்டிருக்கும். படத்தில் இடம் பெற்ற அத்தனை கேரக்டர்களுக்கும் நீர்நிலைகளின் பெயர்களே வைக்கப்பட்டிருக்கும். 






கமல்ஹாசனுடன் கருத்து வேறுபாடு:


கே.எஸ்.ரவிகுமாரிடம் உதவி இயக்குநராக இருந்த நான் கமல் மேல் இருந்த மிகப்பெரிய பேரன்பில் அவருடன் எப்படியாவது ஒரு படத்தில் வேலை பார்த்து விட வேண்டும் என நினைத்தேன். அதன்படி தயாரிப்பாளர் பி.தேனப்பன் மூலமாக சந்தானபாரதியை சந்தித்து மகாநதி படத்தின் நான் வேலை பார்த்தேன். 60 நாட்கள் அப்படத்தின் ஷூட்டிங் நடந்த நிலையில் நடுவில் கமல்ஹாசனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நான் உள்ளிட்ட 4 பேர் பாதியிலேயே வந்து விட்டோம். அவருடன் சண்டை ஏற்பட காரணம் அறியாமை தான். ஒரு காட்சியை இப்படி கொண்டு வந்து விட வேண்டும் என ஒரு கலைஞனா யோசிப்பாங்க. எனக்கு அப்ப அது புரியலை. 


கே.எஸ்.ரவிகுமாரிடம் ஒரு திட்டமிடலுடன் வேலை பார்த்த நான், கமலுக்குள் அந்தந்த இடத்தில் தோன்றும் கற்பனை வளம் வேற மாதிரி இருக்கும்.  அப்படித்தான் மகாநதி படத்துல ஒரு காட்சி நேப்பியர் பாலத்துல எடுத்துருப்பாங்க. கமலும், பூர்ணம் விஸ்வநாதனும் பேசிக்கொள்ளும் காட்சி இடம் பெறும். ஷூட்டிங்கிற்கு காலையிலேயே எல்லோரும் வந்தாச்சு. அந்த நேரம் பார்க்க மழைத்தூறல் விழுகுது. சூரியனும் எட்டிப்பார்க்க வானவில் உருவாகிவிட்டது. உடனே கமலுக்கு இந்த வானவில் பிண்ணனியில் நடந்து வருவது போல காட்சியை படமாக்கலாம் என்ற எண்ணம் ஏற்படுகிறது. நான் இயக்குநரா இருந்தாலும் அந்த எண்ணம் தோன்றிருக்கலாம். 


கமலின் கோபம்.. கிளம்பிய சேரன்


இதனையடுத்து ஷாட் ரெடி என சொல்லிவிட்டு திரும்பி பார்த்தால் கேமராமேனை காணவில்லை. அவர் கேமராவோடு  அண்ணா சமாதி பக்கம் நின்ற வேனில் கொண்டு வைத்துக் கொண்டார். கமல் கேமரா கேமரா என கேட்க, நாங்கள் வண்டிக்கு சென்று விட்டது என சொல்ல, அவருக்கோ செம கோபம். நான் இங்க இருந்து ஓடிப்போய் கேமராவை கொண்டு வர சொன்னால் கேமராவை தரமாட்டேன் என அவர் சொல்கிறார். அப்புறம் அடிச்சி பிடிச்சி கேமராவை வண்டியை வரச்சொல்லி ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு கொண்டு சென்றால் மழை நின்று வானவில் காணாமல் போய்விட்டது. 


இதனால் கடும் கோபமடைந்த கமல் எங்களை திட்ட அசோஸியேட் டைரக்டருக்கு கோபம் வந்து வேலையே வேண்டாம் என சொல்லிவிட்டு போய்விட்டார். அவரே போறாரு..நாம போனாமல் இருந்தால் அசிங்கம் என எண்ணி என்னுடன் 2 பேர் சேர்ந்து 3 பேரும் அங்கிருந்து சென்றுவிட்டோம். ஆனால் இதெல்லாம் நான் இயக்குநரா மாறி என அசிஸ்டென்ட் இயக்குநர்களை படாதபாடுப்படுத்தும்போது தான் எனக்கு புரிந்தது என நேர்காணல் ஒன்றில் சேரன் தெரிவித்துள்ளார்.