தமிழ் சினிமாவின் மாபெரும் கலைஞனாக விளங்கும் நடிகர் கமல்ஹாசனின் குடும்பத்தில் அவரைத் தாண்டி கவனமீர்த்த முக்கியமான கலைஞர்களுள் ஒருவர் அவரது சகோதரர் சாருஹாசன்.
நடிகர் கமல்ஹாசனின் அண்ணனும், நடிகை சுஹாசினியின் தந்தையுமான சாருஹாசன் கோலிவுட்டின் பிரபல குணச்சித்திர நடிகர்களுள் ஒருவராக விளங்கி வருகிறார். தமிழ் சினிமா தாண்டி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்துள்ள சாருஹாசன் சிறந்த பல கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து பல ஆண்டுகளாக சினிமா ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார்.
பரமக்குடியை பூர்விகமாகக் கொண்ட சாருஹாசன், 1986ஆம் ஆண்டு தன் நடிப்புக்காக தேசிய விருதையும் பெற்றுள்ளார். இறுதியாக தமிழில் தாதா 87 படத்தில் நடித்து கவனமீர்த்திருந்தார்.
தற்போது சாருஹாசனுக்கு 93 வயது நிரம்பியுள்ள நிலையில் சினிமாவில் தேர்ந்தெடுத்த படங்களில் மட்டும் நடித்து வருகிறார். இவரது மனைவி ராஜலட்சுமிக்கு தற்போது 88 வயதாகிறது. இந்நிலையில், தன் தந்தை மற்றும் தாய் சாருஹாசன் - ராஜலட்சுமி இருவரும் இந்த வயதில் கைகோர்த்தபடி மகிழ்ச்சியுடன் வாக்கிங் செல்லும் வீடியோக்களை நடிகை சுஹாசினி தன் இன்ஸ்டா பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
காலை 6 மணிக்கு வாங்கிங் ஸ்டிக் உடன் நடைபயிற்சி மேற்கொள்ளும் இவர்களது வீடியோவை உணர்ச்சிப்பெருக்குடன் சுஹாசினி பகிர்ந்துள்ள நிலையில், நடிகை குஷ்பு, கிகி சாந்தனு உள்ளிட்ட பலர் சாருஹாசன் - ராஜலட்சுமி தம்பதியை வாழ்த்தி பதிவிட்டு வருகிறன்றனர்.
1930-ஆம் ஆண்டு பிறந்தவரான சாருஹாசன், புதிய சங்கமம், ஐபிசி 215 எனும் படங்களை இயக்கியும் உள்ளார். 2015ஆம் ஆண்டு டெல்லி உலக புத்தக நிகழ்வில் தன் சுயசரிதை புத்தகமான திங்கிங் ஆன் மை ஃபீட் எனும் புத்தகத்தை சாருஹாசன் எழுதியுள்ளார்.
இறுதியாக தெலுங்கில் பாப்கார்ன் எனும் படத்தில் தோன்றியிருந்த சாருஹாசன், தமிழில் நடிகர் மோகன், குஷ்பு இணைந்து நடிக்கும் ஹரா எனும் படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் மணிரத்னத்தின் மாமனாரான சாருஹாசன், தன் மருமகனைப் போல் இயக்குநராகவும், தன் தம்பியை போல் பிரபல நடிகராகவும் என கோலிவுட்டில் பிரபல கலைஞராக வலம் வந்து ரசிகர்களைப் பெற்று வருகிறார். கன்னட திரைப்படமான தபரானா கதே படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்ற சாருஹாசன், கர்நாடக அரசின் மாநில விருது, ஃபில்ம்ஃபேர் விருதுகளையும் வென்றுள்ளார்.
வழக்கறிஞரான சாருஹாசன், தமிழில் இயக்குநர் மகேந்திரனின் உதிரிப்பூக்கள் படத்தில் நடிகை அஸ்வினியின் தந்தையாக நடித்து அறிமுகப் படத்திலேயே கவனம் ஈர்த்தார். மேலும் பாரதிராஜாவின் வேதம் புதிது படத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி சாருஹாசன் பாராட்டுக்களை அள்ளியது குறிப்பிடத்தக்கது.