சிம்புதேவன் இயக்கத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான அறை எண் 305 இல் கடவுளில் தான் நடித்த ஜாவா சுந்தரேசன் என்கிற கதாபாத்திரம் தனக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்ததால்  தனது பெயரை ஜாவா சுந்தரேசன் என மாற்றியுள்ளார் நடிகர் சாம்ஸ்.

Continues below advertisement

ஜாவா சுந்தரேசன் என பெயர் மாற்றிய நடிகர் சாம்ஸ்

தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நடிகர் சாம்ஸ் " அன்பான ரசிகர்களுக்கும் மக்களுக்கும் நண்பர்களுக்கும் மீடியாவை சேர்ந்தவர்களுக்கும் இன்று விஜயதசமி நன்னாளில் ஒரு செய்தி . என்னுடைய இயற்பெயர் சுவாமிநாதன். திரைத்துறைக்கு வந்த பிறகு நான் தனித்து தெரிய வேண்டும் என்பதற்காக எனது பெயரை "சாம்ஸ்" (CHAAMS) என்று மாற்றிக் கொண்டேன். "சாம்ஸ்" என்ற பெயரில் தான் பல வருடங்களாக பல படங்களில் நடித்து வந்துள்ளேன். ஆனால் இயக்குனர் சிம்பு தேவன் அவர்களின் இயக்கத்தில் வந்த ‘அறை எண் 305ல் கடவுள்’ படத்தில் நான் நடித்த ‘ஜாவா சுந்தரேசன்’ கதாபாத்திரம் மிகவும் புகழ் பெற்று அந்தப் பெயரை சொல்லியே ரசிகர்கள் என்னை அழைப்பதும் அதை வைத்து பல மீம்ஸ்கள் உருவாக்கி, பகிர்ந்து, பரவியதால் அந்தப் பெயர் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகிவிட்டது.

Continues below advertisement

 

எங்கே சென்றாலும் என்னை பார்க்கும் ரசிகர்கள் "ஜாவா சுந்தரேசன்" என்று அழைப்பதோடு தங்கள் சுற்று வட்டாரத்தில் அசுர வளர்ச்சி அடைந்தவர்களை நாங்கள் "ஜாவா சுந்தரேசன்" என்று தான் அழைப்போம் என்று சொல்லி அந்தக் காட்சியில் நான் மூன்று விதமான கெட்டப்புகளில் வந்து அலப்பறை தந்தேன் என்று சிலாகித்து பாராட்டி மகிழ்கின்றனர். எனவே மக்கள் விருப்பமே மகேசன் விருப்பமாக ஏற்று இன்று முதல் (02.10.2025) எனது பெயரை "ஜாவா சுந்தரேசன்" என்று மாற்றிக்கொள்ள முடிவு செய்துள்ளேன்.எனக்கு கிடைத்த இந்த பேருக்கும் புகழுக்கும் பெருமைக்கும் காரணம் "ஜாவா சுந்தரேசன்" என்ற கேரக்டரை உருவாக்கிய இயக்குனர் சிம்பு தேவன் அவர்களே.

அவருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துவிட்டு , முறைப்படி அவரிடம் அனுமதி பெற்றுக் கொண்டு அவரின் வாழ்த்துக்களோடு இனி நான் "ஜாவா சுந்தரேசன்" ஆக எனது திரைப்பயணத்தை தொடர்கிறேன். இந்த நேரத்தில் "அறை எண் 305'ல் கடவுள்" படத்தை தயாரித்த பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் சாருக்கு என் நெஞ்சார்ந்த நன்றியையும் அன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன். நாளை மீது நம்பிக்கை, காலம் வரும்போது யாரும் பெரிய உயரங்களைத் தொடலாம் என்பதற்கு அடையாளமாக அமைந்தது "ஜாவாசுந்தரேசன்" கதாபாத்திரம்.

மீம்ஸ்களில் தங்களது creativity-யைக் கொட்டி, என்னை "ஜாவா சுந்தரேசன்" என சிறுவர்கள் முதல் பெரியவர் வரை சென்றடைய வைத்த அனைத்து மீம்ஸ் படைப்பாளிகளுக்கும் என் உள்ளம் நிறைந்த நன்றி! இந்த நல்ல தருணத்தில் அருமையான பல சிறந்த நகைச்சுவை கதாபாத்திரங்களை எனக்கு தந்து மக்களை மகிழ்விக்க வாய்ப்பளித்த அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் இயக்குனர்களுக்கும் சினிமா துறையை சார்ந்த மற்ற நண்பர்களுக்கும் உதவிய ஊடகத்துறை அன்பர்களுக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகளை கூறிக்கொள்கிறேன். அனைவரும் வழக்கம்போல் தொடர்ந்து உங்கள் அன்பையும் ஆதரவையும் தந்து இனி என்னை "ஜாவா சுந்தரேசன்" என்றே அழைக்குமாறு பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்." என பதிவிட்டுள்ளார்