கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டபோது, அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டு, அதில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே இரண்டு தவெக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் இணைச் செயலாளர் நிர்மல்குமாரை  கைது செய்வதற்காக போலீசார் அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில், இன்று இரவுக்குள் அவர்களை கைது செய்ய வேண்டும் என அவர்கள் திட்டமிட்டுள்ளனர். அது எதனால் தெரியுமா.?

Continues below advertisement

தவெக ஆனந்த், நிர்மல்குமாரை தேடிவரும் போலீசார்

கரூர் வேலுச்சாமிபுரத்தில், கடந்த வாரம் சனிக்கிழமையன்று நடைபெற்ற விஜய் பிரசாரக் கூட்டத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, அந்த நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே இது தொடர்பாக தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மற்றும் நகர செயலாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Continues below advertisement

இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக, தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணைச் செயலாளர் நிர்மல்குமார் ஆகியோர் மீதும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இன்று இரவுக்குள் கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டுவது ஏன்.?

புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல்குமாரை பிடித்து அவர்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என போலீசார் தீவிரம் காட்டிவரும் நிலையில், இதுவரை அவர்கள் இருவரும் எங்கு இருக்கிறார்கள் என தெரியவில்லை.

இதனிடையே, அவர்கள் இருவர் சார்பிலும், முன் ஜாமின் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது.

இதனால் தான், அந்த விசாரணைக்கு முன்னதாக, இன்று இரவுக்குள்ளாகவே, புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல்குமாரை கைது செய்துவிட வேண்டும் என்று போலீசார் தீவிரம் காட்டுகின்றனர். இதனால், அவர்களின் இருப்பிடம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அவர்கள் இருவரின் நண்பர்களிடமும் தனிப்படை போலீசார் இன்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், நிர்மல்குமாரின் உதவியாளரிடமும் போலீசார் நீண்ட நேரம் விசாரணை நடத்தினர்.

அவர்களின் தகவல்களின் அடிப்படையில், புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல் குமாரை பிடிக்கும் வேலையில் போலீசார் தற்போது ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, நேற்று நடந்த தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கும் அவர்கள் இருவரும் வரவில்லை. மேலும், ரகசிய இடத்திலிருந்து தவெக நிர்வாகிகளிடம் அவர்கள் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இருவரையும் இன்று இரவுக்குள் எப்படியாவது பிடித்துவிட வேண்டும் என்பதே போலீசாரின் இலக்காக உள்ளது.