தனியார் யூ டியூப் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டி மூலமாக பிரபலமானவர் பிஜிலி ரமேஷ். தீவிர ரஜினிகாந்தின் ரசிகரான அவர் அந்த பேட்டிக்கு பிறகு மிகவும் பிரபலமானார். இதையடுத்து, அவருக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பிஜிலி ரமேஷ் சென்னையில் காலமானார். அவரது மறைவு ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



பிஜிலி ரமேஷ் மரணம்:


தனியார் யூ டியூப் தொலைக்காட்சி பிரபலம் வி.ஜே.சித்துவின் ப்ராங்க் நிகழ்ச்சி மூலமாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் பிஜிலி ரமேஷ். அவரது உடல்மொழி மற்றும் நகைச்சுவையான பேச்சு மக்களால் மிகவும் ரசிக்கப்பட்டது.  இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அவர் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமானவர். அதன் காரணமாக அவருக்கு அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.


சென்னை, கே.,கே.நகரில் உள்ள எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த பிஜிலி ரமேஷூற்கு அளவுக்கு அதிகமான மதுப்பழக்கம்  இருந்தது. இதன் காரணமாக., கடந்த சில மாதங்களாக அவர் உடல்நலக்குறைவால் கடும் அவதிப்பட்டு வந்தார். இந்த சூழலிலே, அவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார்.


பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல்:


பிஜிலி ரமேஷிற்கு சமூக வலைதளங்களில் கிடைத்த வரவேற்பு காரணமாக அவருக்கு ஹிப் ஹாப் தமிழா நடித்த நட்பே துணை படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்திற்கு பிறகு கோமாளி, ஆடை, பொன்மகள் வந்தாள் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மேலும், விஜய் தொலைக்காட்சியில் ஔிபரப்பான ரியாலிட்டி ஷோ ஒன்றிலும் பங்கேற்றுள்ளார். பிஜிலி ரமேஷ் மறைவுக்கு பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு பிஜிலி ரமேஷ் அளித்த பேட்டி ஒன்றில் மதுப்பழக்கம் காரணமாகவே தான் இவ்வாறு ஆகிவிட்டதாக மிகவும் வேதனையுடன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.