தொடர்ச்சியான படங்கள் தோல்வியடைந்ததுதான் சின்ன தளபதி பட்டத்தை நீக்கியதற்கு உண்மையான காரணமா? என்கிற கேள்விக்கு நடிகர் பரத் விளக்கமளித்துள்ளார்


பரத்


செல்லமே ,காதல் , வெயில், எம் மகன்,  பட்டியல் ஆகிய அடுத்தடுத்த வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் நடிகர் பரத். குறைவான காலத்தில் பெரிய ஸ்டார் நடிகராக வலம் வந்த பரத்  நடித்த அடுத்தடுத்தப் படங்கள் தோல்வியை சந்தித்தன.  ஆக்‌ஷன் , காமெடி , ஃபேமிலி டிராமா, வில்லன் என எல்லாவிதமான கதாபாத்திரங்களிலும் பரத் நடித்துள்ளார். பேரரசு இயக்கத்தில் பரத் நடித்த பழனி படத்தில், பரத்திற்கு சின்ன தளபதி என்கிற பட்டம் வழங்கப்பட்டது.


இந்தப் படத்தைத் தொடர்ந்து அடுத்தப் படங்களில் இந்த பட்டம் நிலைத்துவிட்டது. அடுத்தடுத்த படங்களின் தோல்விக்குப் பின் தன் பெயருக்கு முன் இருந்த சின்ன தளபதி என்கிற பட்டத்தை நீக்கினார் பரத், அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்களிலும் இந்த பெயர் இடம்பெறவில்லை. சின்ன தளபதி என்கிற பட்டத்தை தன் பெயரில் இருந்து நீக்கிய காரணத்தை நடிகர் பரத் தெரிவித்துள்ளார்.


‘சின்ன தளபதி பட்டத்தை நீக்கியது ஏன்?’


தனது படங்கள் தொடர்ச்சியாக வெற்றிபெற்றபோது பரத்துக்கு சின்ன தளபதி பட்டம் கொடுக்கப் பட்டது. அதைத் தொடர்ந்து தொடர்ச்சியாக படங்களின் தோல்வியின் போது அந்த பட்டம் நீக்கப் பட்டது. இது தொடர்பாக பரத் பேசியபோது “ பேரரசு தான் சின்ன தளபதி பட்டத்தை வைக்கச் சொல்லி சொன்னார். அந்த நேரத்தில் எல்லா நடிகர்களுக்கும் ஏதாவது ஒரு பட்டம் வைப்பது வழக்கமாக இருந்தது. பட்டப் பெயர் வேண்டாம் என்று எல்லா நடிகர்களும் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் சினிமாவில் அது ஒரு வழக்கமாக இருந்தது. சின்ன தளபதி என்று பெயர் வைத்த காரணத்தினால் தான் என்னுடைய படங்கள் ஓடவில்லை என்று இல்லை.


நான் தேர்வு செய்த கதைகளில் தவறு இருந்திருக்கலாம், சில கதைகள் சரியாக தேர்வு செய்தும் அதை இயக்குநர் நடைமுறைப்படுத்திய விதம் தவறாக இருந்தது. படம் தோல்வி அடைந்ததற்கு பின் இந்த மாதிரியான காரணங்கள் தான் இருந்ததே தவிர பட்டப்பெயர் காரணம் இல்லை. அதற்கு பிறகு நான் நடித்த படங்களின் கதைகள் வேறுபட்டன.


சினிமாவில் ட்ரெண்ட் மாறிவிட்டது எல்லா நடிகர்களும் தங்களது பெயருக்கு முன் இருந்த பட்டபெயரை நீக்கினார்கள். அதனால் நானும் அதை தேவையில்லாமல் வைத்துகொள்ள வேண்டாம் என்று நீக்கினேன்” என்று பரத் கூறினார்


பரத் நடித்து வரும் படங்கள்


தற்போது பரத் ”ஒன்ஸ் அபன் ஏ டைம் இன் மெட்ராஸ்” , காளிதாஸா 2 , இப்படிக்கு காதல் , முன்னறிவான் ஆகியப் படங்களில் நடித்து வருகிறார்.