போதைக்கு அடிமையான தன்னை மீட்டுக் கொண்டு வந்தது எது என்ன என்பதை நடிகர் பானுசந்தர் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர் என பன்முக திறமை கொண்டவர் பானுசந்தர். “ஓ வசந்த ராஜா” என நீங்கள் கேட்டவை படத்தில் அவரின் பாடலை இன்றளவும் இசை ரசிகர்களால் மறக்க முடியாது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள பானுசந்தர், தனது திரையுலக அனுபவம் பற்றி நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார்.
அதில், “என்னுடைய அப்பா இசையமைப்பாளராக இருந்ததால் எனக்கும் இசைத்துறையில் செல்ல வேண்டும் என்ற கனவு இருந்தது. அப்பாவிடம் வேலை பார்த்துக் கொண்டிருந்த சக்தி பாபு என்பவர் என் அம்மாவிடம் சென்று, ‘பையன் அழகாக இருக்கான். ஏன் நடிக்கக்கூடாது’ என சொன்னார். அதிலிருந்து அம்மாவுக்கு நான் நடிக்க வேண்டும் என ஆசை வந்தது. அவர் விருப்பத்துக்கு இணங்க நான் ரஜினி பயின்ற திரைப்பட கல்லூரியில் சேர்ந்தேன். அப்போது அவர் அபூர்வ ராகங்கள் படம் பண்ணியிருந்த நிலையில் எங்களுக்கு திரையிட்டு காட்டினார். எப்போதும் திரைப்பட கல்லூரியில் இருக்கும் ரஜினி, அங்கிருக்கும் பாத்ரூம் கண்ணாடியில் ஸ்டைலான மேனரிசங்களை பண்ணி பார்ப்பார். அதனால் அவருக்கு அங்கே ரூல்ஸ் போட்டாங்கன்னா பார்த்துக்கோங்க.
நான் அப்பாவிடம் சென்று இசை அமைக்கிறேன் என சொன்னேன். ஆனால் அவரோ, ‘உனக்கு மியூசிக் பற்றி என்ன தெரியும்’ என கேட்டார். அப்பாவுடன் கம்போசிங் போகும்போது ரிதம் எல்லாம் வாசித்துக் கொண்டிருந்தேன். மேலும் அப்பாவுக்கு தெரியாத இசை கருவியாக இருந்த கிட்டார் கற்றுக் கொண்டேன். இதெல்லாம் என்னுடைய 15 வயதில் நடந்தது. ஆனால் என் அப்பா திட்டி விட்டார். நான் அம்மாவிடம் சென்று சொல்லி அவரின் வற்புறுத்தலால் இருவரும் என்னை மும்பையில் உள்ள இசையமைப்பாளர் நௌஷாத் வீட்டுக்கு அழைத்து சென்றார்கள்.
அங்கு குடும்பத்தினர் மத்தியில் தம் மரோ தம் பாடலை பாடிக்காட்டினேன். நௌஷத் நான் நன்றாக பாடுவதாக பாராட்டினார். இதையெல்லாம் நினைத்து பார்த்தால் கனவு மாதிரி தெரிகிறது. நான் நேஷனல் காலேஜில் படித்து கொண்டிருந்த போது, அங்கிருந்த பிரின்ஸிபால் சுதந்திர தினத்துக்கு நிகழ்ச்சி ஒன்றை நடத்தினோம். அந்த நிகழ்ச்சிக்கு நௌஷத் தான் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார்.
அதேசமயம் நௌஷத் அவர்கள் வீட்டில் தான் இருந்தேன். அங்கு அவரது மகன்களே மற்றவர்கள் அறைக்கு செல்ல தயங்கும் நிலையில் நான் எல்லா அறைக்கும் செல்வேன். அந்த குடும்பத்தில் ஒருவராக இருந்தேன். ஒரு கட்டத்தில் நௌஷத் வீட்டில் இருந்து வெளியேறி ஹாஸ்டலுக்கு சென்றேன். அப்போது தான் நான் போதைக்கு அடிமையானேன். அம்மா என்னை பார்க்க வந்த போது, நான் இருந்த தோற்றத்தை கண்டு கதறி அழுதார். அவரை சமாதானப்படுத்தி சென்னைக்கு அனுப்பி வைத்தேன். சென்னை வந்தும் என்னை போதையை நிறுத்த முடியவில்லை.
அப்போது என்னுடைய அண்ணன் வந்து இதெல்லாம் ஒரு போதையா, நான் வேற போதையை தருகிறேன் என கூறி தற்காற்பு கலைகள் கற்றுக் கொள்ள சொன்னார். ஒருவாரம் பாரு, இல்லையென்றால் உன்னுடைய போதைக்கே செல்லலாம் என சொன்னார். ஆனால் எனக்கு மிகவும் தற்காப்பு கலை பிடித்து விட்டது” என தெரிவித்துள்ளார்.