Chennai Formula 4 Race: சென்னையில் நடைபெற உள்ள ஃபார்முலா 4 கார் பந்தயத்திற்கான, தொடக்க டிக்கெட் விலை ஆயிரத்து 699 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


ஃபார்முலா கார் பந்தயம்:


மின்னல் வேகத்தில் சீறிப்பாயும் கார்களை பார்ப்பது என்பதில் அனைவருக்குமே ஒரு ஆர்வம் இருக்கத்தான் செய்கிறது. இது தான் ஃபார்முலா பந்தயங்களாக நடத்தப்படுகிறது. பெரும்பாலும் வெளிநாடுகளில் நடைபெறும் இந்த போட்டிகளை தொலைக்காட்சிகளில் தான் இந்தியர்களால் காண முடியும். இந்நிலையில் தான் இந்திய கார் பந்தய ரசிகர்களை ஊக்கப்படுத்தும் விதமாக, தெற்காசியாவிலேயே முதல்முறையாக சென்னையில் ஃபார்முலா 4 இந்தியன் ரேசிங் லீக் கார் பந்தயம் நடைபெற உள்ளது. டிசம்பர் 9 மற்றும் 10ம் தேதிகளில் நடைபெற உள்ள இந்த போட்டிக்கான டிக்கெட்டுகளின் விற்பனையும் தற்போது தொடங்கியுள்ளது.


டிக்கெட்டுகளை எங்கு வாங்கலாம்:


சென்னை தீவுத்திடல் மைதானத்தைச் சுற்றியுள்ள 3.5 கிலோ மீட்டர் சுற்றளவில் இரவு போட்டியாக நடத்தப்பட உள்ளது.  சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் ரேசிங் புரோமோ பிரைவேட் லிமிடட் ஆகியோர் இணைந்து நடத்தும் இந்த போட்டிக்கான டிக்கெட்டுகளை, பேடிஎம் இன்சைடரில் இருந்து ரசிகர்கள் வாங்கலாம். டே பாஸ் மற்றும் வீக் எண்ட் பாஸ் ஆகவும் டிக்கெட்டுகளை ரசிகர்கள் பெறலாம்.


டிக்கெட் விவரம்:


டிக்கெட் விலை குறைந்தபட்சமாக ஆயிரத்து 699 ரூபாயிலிருந்து அதிகபட்சமாக 16 ஆயிரத்து 999 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கான டிக்கெட்டுகள் பிரீமியம் ஸ்டேண்டர்ட் ரூ.3399 (early bird), கிராண்ட் ஸ்டேண்டர்ட் 1, 2, 3, 4, 5 ரூ.1699 (early bird) மற்றும் ரூ.1999 (phase 1), Gold Lounge ரூ.6799, Platinum Lounge ரூ.10999 (early bird) பிரிவுகளாக விற்பனை செய்யப்படுகிறது. வீக் எண்ட் பாஸ்களாக Premium Stand ரூ.5949 (early bird), Grand Stand 1, 2, 3, 4, 5 ரூ.2125 (early bird), Gold Lounge ரூ.11899 , Platinum Lounge ரூ.16999 (early bird) ஆகிய பிரிவுகளில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன.


போட்டி விவரம்:


போட்டிக்காக சுவாமி சிவானந்தா சாலை, தீவுத்திடல், அண்ணாசாலை பகுதி மற்றும்
நேப்பியர் பாலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நடைபாதைகள்,  தடுப்புகள் மற்றும் சாலைகள் அகற்றப்பட்டு, பந்தய தூரமான 3.5 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால், அந்த பகுதிகளில் போக்குவரத்தும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தெற்கு ஆசியா மற்றும் இந்தியாவில்  ஃபார்முலா 4 சர்வதேச கார்பந்தயம் நடைபெறுவதும், குறிப்பாக இரவு பந்தயமாக நடைபெறுவது இதுவே முதல் முறையாகும். இரவு நேரத்தில் நடைபெறும் இந்த கார் பந்தயதிற்காக,  பிரத்யேக சாலை அமைக்க ரூபாய் 8 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. கார் பந்தய ரசிகர்களுக்கு இது ஒரு சிறந்த அனுபவமாக இருக்கும் என, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.