என்னுடைய தம்பி ஆகாஷூக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் ஆதரவு கொடுக்க வேண்டும் என நடிகர் அதர்வா முரளி வேண்டுகோள் விடுத்துள்ளார். 


ஹீரோவான முரளியின் 2வது மகன்:


தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவராக 90களின் காலக்கட்டத்தில் திகழ்ந்தவர் முரளி. இவர் 2010 ஆம் ஆண்டு மாரடைப்பால் காலமானார். இவரது மூத்த மகன் அதர்வா அதே ஆண்டில் பாணா காத்தாடி படம் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து முன்னணி நடிகராக உள்ளார். இந்நிலையில் முரளியின் 2வது மகன் ஆகாஷூம் ஹீரோவாக அறிமுகமாகிறார். 


அஜித்குமார், ஆர்யா, பவன் கல்யாண் மற்றும் பல முன்னணி நடிகர்களுக்கு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்தவர் விஷ்ணுவர்தன். இவர் மிக நீண்ட இடைவெளிக்குப் பின் “நேசிப்பாயா” என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஆகாஷ் ஹீரோவாக அறிமுகமாக, அதிதி ஷங்கர் ஹீரோயினாக நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகை நயன்தாரா வெளியிட்டார். தொடர்ந்து படம் பற்றிய அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. 


 


இதில் ஆகாஷின் அண்ணனும், நடிகருமான அதர்வா முரளி கலந்து கொண்டு அப்பா முரளி பற்றி பேசினார். அதாவது, “இந்த நாள் என்னுடைய குடும்பத்துக்கு ரொம்ப சந்தோசமான நாள். அதேசமயம் ரொம்ப நெகிழ்ச்சியாக இருக்கிறது. தயாரிப்பாளர் பிரிட்டோவுக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல் ஆகாஷின் கனவை நிறைவேற்றிய இயக்குநர் விஷ்ணுவர்த்தன், எனக்கு முதல் படம் இசையமைத்த யுவன் ஷங்கர் ராஜா, தம்பி படத்துக்கும் இசையமைத்துள்ளார்.


முரளியின் கடைசி தருணம்:


நான் சினிமாவில் அறிமுகமாகும்போது என்னுடைய அப்பா முரளி இருந்தார். அப்போது அவருடைய மனநிலை என்னவாக இருக்கும் என நான் யோசித்தே பார்க்கவில்லை. ஏனென்றால் நான் பாணா காத்தாடி பட மேடையில் பேசும்போது அவர் கீழே உட்கார்ந்து இருந்தார். நான் ஒவ்வொரு முறையும் பேசிட்டு அப்பாவை பார்த்து சரியாக பேசுகிறனா என கேட்டேன். 


இன்றைக்கு ஆகாஷ் மேடையில் இருக்கும்போது நான் கீழே இருக்கிறேன். அப்பாவின் மனநிலையை உணர்ந்தேன். எங்க அப்பாவின் கடைசி தருணம் பற்றி சொல்கிறேன். அந்த நேரம் எல்லாரும் உடைந்து போயிருந்தோம். நான் அப்பா கிட்ட இருக்கும்போது ஆகாஷ் சின்ன பையன். என் கையை பிடிச்சிட்டு கூட நின்னுட்டு இருந்தான். அவனுக்கு என்ன நடக்கிறது புரியுதா இல்லையா என தெரியவில்லை. தம்பி முன்னாடி அழ கூடாதுன்னு இருந்தேன். ஒருகட்டத்தில் நான் உடைந்து அழுதபோது நாம நல்லா பாத்துக்கலாம் என ஆகாஷ் சொன்னான். இன்னைக்கு அவன் ஹீரோவா வந்து இருக்கான். எங்க அப்பா முரளிக்கும் சரி, எனக்கும் சரி என்ன ஆதரவு கொடுத்தீங்களோ அதே அன்பையும், ஆதரவையும்  ஆகாஷூக்கு தர வேண்டும்” என அதர்வா பேசினார்.