திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறனுக்கு கையெடுத்து கும்பிட்டு  நன்றி தெரிவித்துள்ளார் நடிகர் அஷோக் செல்வன்.


ப்ளூ சட்டை விமர்சனம்:


யூட்யூபில் சினிமா விமர்சனம் செய்து வருபவர்  ப்ளூ சட்டை மாறன். தனது விமர்சன மொழிக்காக நிறைய சர்ச்சைகளில் சிக்கியுள்ளார் மாறன். திரைப்படத்தை விமர்சிக்கும் போது மிகக் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி வந்தார் மாறன். இதற்காக கடுமையாக திரைப்பட ரசிகர்களால் இணையதளத்தில் விமர்சிக்கப்பட்டார். ரசிகர்களால் மட்டுமில்லாமல திரைப் பிரபலங்களாலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசி வந்த ப்ளூ சட்டை  சில காலங்கள் கழித்து தனது விமர்சனங்களில் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்துவதை குறைத்துக் கொண்டு படங்கள் குறித்தான விமர்சனங்களை மட்டுமே பேசத் தொடங்கினார் .


இன்று ஒரு படம் வெளியாகி இருக்கிறதென்றால் ப்ளூ சட்டை மாறன் அந்தப் படம் குறித்து என்ன சொல்லியிருக்கிறார் என்பதை பார்த்தப் பின்பே திரையரங்குகளுக்கு செல்லும் ரசிகர்கள் இருக்கிறார்கள். ரசிகர்களை விடுங்கள் தங்களது படம் குறித்து ப்ளூ சட்டை என்ன சொல்லியிருக்கிறார் என்று கவனிக்கும் படக்குழுக்களும் இருக்கின்றன.


போர் தொழில்:


இதற்கு காரணம்  படத்தைப் பற்றி நன்றாக அராய்ந்து அர்த்த்பூர்வமாக மாறன் பேசுகிறார் என்பதில்லை. அவருக்கு படம் பிடிக்கவில்லை என்றால் அது நன்றாக இல்லை. பிடித்திருந்தது என்றால் அது நன்றாக இருக்கிறது அவ்வளவுதான் மாறன் கணக்கு. இப்படி ஒரு விமர்சன போக்கை சார்ந்து ஒரு படத்தின் வெற்றித் தோல்வி இருப்பது உண்மையில் நமக்கு வரமா சாபமா என்கிற கேள்விகள் இணையதளத்தில் எழாமலும் இல்லை.  


தற்போது அஷோக் செல்வன் மற்றும் சரத்குமார் ஆகியவர்கள் இணைந்து நடித்துள்ளத் திரைப்படம் போர் தொழில் . அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இந்தப் படத்தை இயக்கியுள்ளார். போர் தொழில் திரைப்படம் வெளியாக அனைத்துத் தரப்பு ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில் படம் குறித்து ப்ளூ சட்டை மாறனின் விமர்சனம் படத்திற்கு மேலும் பலம் சேர்த்துள்ளது.


ப்ளாப் நடிகர் டூ பாராட்டு:


போர் தொழில் திரைப்படம் முற்றிலும் ஒரு புது அனுபவமாக இருந்தாகவும் படத்தில் ஒரு காட்சிகூட  தேவையற்றதாக தென்படவில்லை எனவும் அசோக் செல்வன் மற்றும் சரத்குமார் ஆகிய இருவரின் நடிப்பும் படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கின்றது என போர் தொழில் படத்தைப் பாராட்டியுள்ளார் ப்ளூ சட்டை மாறன். மேலும் கடந்த ஆண்டு அசோக் செல்வன் நடிப்பில் வெளிவந்த நித்தம் ஒரு வானம் மற்றும் சில நேரங்களில் சில மனிதர்கள் ஆகியத் திரைப்படங்களைப் பார்த்துவிட்டு கோலிவுட்டின் மிகப்பெரிய ஃப்ளாப்  நடிகர் அஷோக் செல்வன் என ப்ளூ சட்டை மாறன் குறிப்பிட்டுந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


அவரது இந்த பாராட்டிற்கு பதில் அளித்துள்ள நடிகர் அசோக் செல்வன் கைகோர்த்து கும்பிடும் எமோஜியை பயன்படுத்தி நன்றியைத் தெரிவித்துள்ளார். அசோக் செல்வன் மேலும் இதுபோன்ற கதாபாத்திரங்களில் நடிப்பதை பார்க்க தான் மிக ஆர்வமாக உள்ளதாக கூறியுள்ளார் மாறன்