இந்த ஆண்டு அதிக ஃப்ளாப் படங்களைத் தந்த நடிகர் என தன்னைக் குறிப்பிட்ட ப்ளு சட்டை மாறனுக்கு பதிலடி தந்து நடிகர் அசோக் செல்வன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

நலன் குமாரசாமியின் ‘சூது கவ்வும்’ படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாகி தேர்ந்தெடுத்த படங்களில் நடித்து படிப்படியாக வளர்ந்தவர் நடிகர் அசோக் செல்வன்.

பிட்சா 2, தெகிடி, ஆரஞ்சு மிட்டாய் என தொடக்க காலத்தில் கவனமீர்த்த படங்களில் நடித்த அசோக் செல்வன் 2020ஆம் ஆண்டு ஓ மை கடவுளே படத்தின் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தார்.

தொடர்ந்து தெலுங்கு, மலையாளப் படங்களிலும் அசோக் செல்வன் நடிக்கத் தொடங்கிய நிலையில், இந்த ஆண்டு மட்டும் சில நேரங்களில் சில மனிதர்கள், மன்மத லீலை, ஹாஸ்டல், வேழம், நித்தம் ஒரு வானம் என அசோக் செல்வனின் ஐந்து படங்கள் வெளியாகின.

இதில் இறுதியாக வெளியான நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியான  ‘நித்தம் ஒரு வானம்’ படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது.

இந்நிலையில், இந்த ஆண்டு அதிக ஃப்ளாப் படங்கள் கொடுத்த நடிகர் என அசோக் செல்வனின் பெயரைக் குறிப்பிட்டு முன்னதாக பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் பதிவிட்டிருந்தார்.

அசோக் செல்வன் நடித்த ஐந்து படங்களும் ஃப்ளாப் என்றும், அடுத்த இடங்களில் சசிகுமார், அதர்வா ஆகிய நடிகர்கள் மூன்று ஃப்ளாப் படங்களுடன் உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

 

ப்ளூ சட்டை மாறனின் இந்தப் பதிவில் பலருக்கும் உடன்பாடு இல்லாத நிலையில், நித்தம் ஒரு வானம் தோல்விப் படம் அல்ல என்றும், வணிகரீதியாக தோல்வியைத் தழுவிய நல்ல படங்கள் என நீங்கள் இவற்றைக் குறிப்பிட்டிருக்க வேண்டும் என்றும் கூறி பலரது இந்தப் பதிவில் அசோக் செல்வனுக்கு ஆதரவாக கமண்ட்ஸ் பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் ப்ளூ சட்டை மாறனுக்கு பதிலடி தரும் வகையில், “குரைக்கும் நாய்களை கண்டு கொள்ளாமல் முன்னோக்கி செல்வோம்” என அசோக் செல்வன் கடுமையாக சாடி பதிவிட்டுள்ளார்.

 

புள்ளிவிவரம் தருவதாகக் கூறி நடிகர் அசோக் செல்வனை கோபப்படுத்திய ப்ளூ சட்டை மாறனின் செயல் இணையத்தில் பேசுபொருள் ஆகியுள்ளது.