கடந்த காலங்களை நம் கண்முன்னே நிறுத்திய படங்கள் என்றும் சோடை போனதில்லை. அந்த வகையில் சுதந்திர போராட்டத்தை, கண்ணீர் நிறைந்த காதலோடு சொன்ன ‘மதராசப்பட்டினம்’ வெளியாகி இன்றோடு 13 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
சவாலான பணியை சாதித்த படக்குழு
வரலாறு சம்பந்தப்பட்ட படங்களை எடுக்க வேண்டும் என்றால் அந்த காலக்கட்டத்திற்கே சென்று என்ன வகையான மக்களின் வாழ்க்கை இருந்தது என்பதை அறிய வேண்டும். அப்படி 2010 ஆம் ஆண்டில் சுதந்திர போராட்ட காலக்கட்டத்தில் இருந்த சென்னையை கண்முன்னே நிறுத்த முடியுமா? என்ற கேள்விக்கு சரியான பதிலை மதராசப்பட்டினம் படத்தின் ஆர்ட் டிபார்ட்மென்ட் கொடுத்தது. தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு 1947ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் சென்னை நகரம்.. மன்னிக்கவும் ‘மதராஸ் பட்டினம்’ இப்படியா இருந்தது என ஆச்சரியப்படும் அளவுக்கு சாதனையை நிகழ்த்தியது இந்த 'மதராசபட்டினம்'
சாதித்த விஜய் - ஆர்யா கூட்டணி
பிரியதர்ஷனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய விஜய் கிரீடம், பொய் சொல்லப் போறோம் படங்களை தொடர்ந்து மதராசப்பட்டினம் படத்தை இயக்கினார். முதல் 2 படங்கள் ரீமேக் என்ற நிலையில், இந்த படம் விஜய்யின் நேரடி தமிழ் படமாகும். மதராசப்பட்டினம் படத்தில் ஆர்யா, எமி ஜாக்சன், நாசர், எம்.எஸ்.பாஸ்கர், சதீஷ், கொச்சின் ஹனீஃபா என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்தனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார்.
படத்தின் கதை
இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்துக் கொண்டிருந்த நிலையில், ஆங்கிலேய குடும்பத்தைச் சேர்ந்த எமி ஜாக்சனுக்கும், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆர்யாவுக்கும் காதல் ஏற்படுகிறது. இதனிடையே இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்க இவர்கள் காதல் ஒன்று சேர்ந்ததா? என்பதை கடைசி வரை போரடிக்காத வகையில் காட்சிப்படுத்தியிருந்தார். மதராசப்பட்டினம் தமிழ் சினிமாவின் ‘டைட்டானிக்’ என ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
ரசிகர்களை கவர்ந்த கலை
கலை இயக்குநர் செல்வகுமார், ஒளிப்பதிவாளர் நிரவ் ஷா, விஎஃப்எக்ஸ் குழுவினர் பங்கு மிகப்பெரிய அளவில் படத்தின் வெற்றிக்கு கைக்கொடுத்தது. பிரிட்டிஷ் அரசு, அலுவலகங்கள், வீடுகள், சலவை தொழில் நடக்கும் இடங்கள், அங்கு வாழும் மக்களின் உணர்வுகள், ட்ராம் வண்டி பயணம், கூவம் ஆற்றில் படகுப் பயணம் என நிகழ்காலத்தில் அந்த இடங்கள் இவைதானா என நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு படக்குழுவினர் உழைத்திருந்தனர்.
மியூசிக்கில் கலக்கிய ஜி.வி.பிரகாஷ்குமார்
மதராசப்பட்டினம் படத்திற்கு மற்றொரு பலமாக அமைந்தது பாடல்களும் பின்னணி இசையும். பூக்கள் பூக்கும் தருணம் பாடல் தமிழ் சினிமாவில் சிறந்த மெலடி டூயட் பாடல்களில் ஒன்றாக காலத்துக்கும் நிலைக்கும் வகையில் உருவாக்கபட்டிருந்தது. இதேபோல் மேகமே..மேகமே பாடலில் மறைந்த இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், நடிகர் விக்ரமை பாட வைத்து பிரமிப்பை ஏற்படுத்தினார்.
1947 ஆகஸ்ட் 15 அன்று இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தப்போது சென்னை எப்படி இருந்தது என்பதை கண்முன்னே நிறுத்தி என்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தது இந்த ‘மதராசப்பட்டினம்’...!