நடிகர் அருண் விஜய் நடித்துள்ள பார்டர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். 


பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மகனும் நடிகருமான அருண் விஜய் கடந்த 1995 ஆம் ஆண்டு முறை மாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். கிட்டதட்ட 20 ஆண்டுகளாக தனக்கென அங்கீகாரம் கிடைக்காமல் தவித்த அவருக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான அஜித்தின் என்னை அறிந்தால் படம் திருப்புமுனையாக அமைந்தது. இப்படத்தில் விக்டர் என்னும் வில்லன் கேரக்டரில் அவர் அசத்தியிருந்தார். 






இதனைத் தொடர்ந்து குற்றம் 23, செக்கச் சிவந்த வானம், தடம், மாஃபியா, யானை என கவனமாக கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அதே சமயம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் சமீபத்தில் ஒளிபரப்பான தமிழ் ராக்கர்ஸ் தொடரின் மூலம் அவர் ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றார். அடுத்ததாக அருண் விஜய் நடிப்பில் ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கத்தில் உருவாகியுள்ள சினம் படம் செப்டம்பர் 16 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதில் அருண் விஜய்க்கு ஜோடியாக பாலக் லால்வனி நடித்துள்ளார்.


ஷபிர் இசையமைத்துள்ள இப்படத்தில் அருண் விஜய் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். இதற்கிடையில் குற்றம் 23, தமிழ் ராக்கர்ஸ் ஆகியவற்றில் அருண் விஜய்யோடு இணைந்த இயக்குநர் அறிவழகன் மூன்றாவது முறையாக “பார்டர்” என்னும் படத்தை அவரை வைத்து இயக்கியுள்ளார். படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் முன்னரே முடிந்தாலும் படமானது ரிலீஸாகாமல் தள்ளிக் கொண்டே போனது. 






கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி படத்தை வெளியிட முடிவு செய்த நிலையில், அன்றைய தினம் கார்த்தி நடித்த விருமன் படம் வெளியானதால், ரிலீஸ் தேதி ஆகஸ்ட் 31 ஆம் தேதியாக மாற்றப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில்  பார்டர் படம் அக்டோபர் 5 ஆம் தேதி ரிலீசாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகை ரெஜினா கசன்ட்ரா ஹீரோயினாக நடிக்க சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.