திருவண்ணாமலை (Tiruvannamalai News): திருவண்ணாமலை நகரில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் திரைப்பட நடிகர் அருண்விஜய் தனது மனைவி ஆர்த்தியுடன் வந்து சாமி தரிசனம் செய்தார்.


அருண்விஜய் நடித்துள்ள மிஷன் திரைப்படம் விரைவில் வெளிவர உள்ளது. படம் வெற்றி பெற வேண்டி அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமலையம்மனை சாமி தரிசனம் செய்தார். மேலும் கோயில் நிர்வாகத்தின் மூலம் நடிகர் அருண் விஜய்க்கு மாலை அணிவித்து பிரசாதம் வழங்கப்பட்டது. அதேபோன்று அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் நடிகர் அருண்விஜயுடன் போட்டி போட்டுக் கொண்டு செல்பி எடுத்தனர். 


 


 




 


சாமி தரிசனம் செய்து பின்னர் அருண் விஜய் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”ஒவ்வொரு முறையும் திரைப்படம் வெளிவருவதற்கு முன்னதாக அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு சாமி தரிசனம் மேற்கொண்டு செல்வது வழக்கம். விரைவில் மிஷன் திரைப்படம் திரைக்கு வரவுள்ளது. அதனை தொடர்ந்து வணங்கான் திரைப்படம் நடித்து வருகிறேன். அதன் இறுதி கட்ட படப்பிடிப்பு திருவண்ணாமலை நடக்க உள்ளது. இளைஞர்களுக்கு கடவுள் பக்தி இருக்க வேண்டும். இறைவனிடம் பயம் இருக்க வேண்டும். தெளிவான முடிவு எடுக்க கடவுள் பக்தி தேவைப்படும். நடிகர்கள் அரசியலுக்கு வருவது நல்ல விஷயம் தான். புதிய ஆட்கள் அரசியலுக்கு வருவது மக்களின் விருப்பம் தான். மக்களுக்கு நல்லது நடக்க நல்லது செய்ய வருபவர்களை வரவேற்கிறோம்” என்றார்.


நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து கேள்விகளை செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு,” விஜய் அரசியலுக்கு வருவது நல்ல விஷயம். அவர் முதலில் அரசியலுக்கு வருவதை அறிவிக்கட்டும். வரவேற்கத்தகுந்த விஷயம். இன்றைய காலகட்டத்தில் நடிகர்கள் அரசியல் வருவது நல்ல விஷயம். நடிகர்கள் சங்க கட்டிடம் குறித்து நடிகர் கார்த்தியிடம் பேசியுள்ளேன் அதற்கான ஆலோசனைகள் நடைபெற்று வருகிறது.இது குறித்து தகவல்கள் வெளிவரும் ” என்றார்.


 


 




 


ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் பார்க்க ஆவலுடன் உள்ளேன் 


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, நானும் ரஜினிகாந்தின் ரசிகன் என்ற முறையில் படம்பார்க்க ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். தற்போது இயக்குனர் பாலா இயக்கத்தில் வணங்கான் திரைப்படத்தில் நடித்து வருவதாகவும் தெரிவித்தார்.


முன்னதாக, அருண்விஜய் நேற்று இரவு தனது மனைவி ஆர்த்தியுடன் அருணாசலேஸ்வரர் திருக்கோவிலின் கிரிவலப் பாதையில் அமைந்துள்ள இந்திரலிங்கம், அக்னி லிங்கம், எமலிங்கம், நிருதிலிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், சந்திரலிங்கம், குபேர லிங்கம், ஈசானியலிங்கம் உள்ளிட்ட அஷ்ட லிங்கங்களுக்கும் சென்று கற்பூரம் ஏற்றி சுவாமி தரிசனம் மேற்கொண்ட அவர், அருள்மிகு இடுக்கு பிள்ளையார் கோவிலில்  பின்புறத்தில் உள்ளே நுழைந்து வெளியே வந்து தரிசனம் மேற்கொண்டார்.