நடிகர் அருண் விஜய் இன்று தன் பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில், தன் பிறந்த்நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ரசிகர்களுடன் இணைந்து இரத்த தானம் செய்துள்ளார்.


கோலிவுட் சினிமாவில் பலகட்ட போராட்டங்கள் தோல்விகளைக் கடந்து கவனமீர்த்து தனக்கென தனி ரசிகர்களைக் கொண்டிருக்கும் நடிகர் அருண் விஜய். இவர் இன்று தன் 46ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இந்நிலையில் அவருக்கு ரசிகர்களும் திரைத்துறையினரும் இன்று காலை முதலே தங்கள் வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.


இந்நிலையில் நடிகர் அருண் விஜய் இன்று தன் பிறந்தநாளை உதவும் கரங்கள் இல்லத்தில் குழந்தைகளுடன் இணைந்து கொண்டாடினார். மேலும் தன் ரசிகர்களுடன் இணைந்து ரத்த தானமும் செய்தார். 


இன்று காலை உதவும் கரங்கள் ஆதரவற்றோர் இல்லத்தில் உணவு பரிமாறி, அவர்களுடன் இணைந்து அவரது பிறந்த நாளைக் கொண்டாடிய அருண் விஜய், அதன் பின் ரசிகர்கள் நற்பணி மன்றம் மூலம் இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் நடத்திய மாபெரும் இரத்ததான முகாமில் கலந்து கொண்டார். அங்கு ரசிகர்களுடன் இணைந்து தானும் ரத்த தானம் செய்தார். 


 






நடிகர் அருண் விஜய் ரசிகர் மன்றம் சார்பில் ரசிகர்கள் திரளாக இங்கு வந்து கலந்துகொண்டது கவனமீர்த்துள்ளது. மற்றொருபுறம் அருண் விஜய்யின் பிறந்தநாளை ஒட்டி இன்று காலை வணங்கான் படக்குழு அவருக்கு போஸ்டர் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்திருந்தது.


கோலிவுட்டின் முக்கிய இயக்குநர் பாலா இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் இணைந்துள்ள திரைப்படம் வணங்கான்.  


பாலாவின் பி ஸ்டூடியோஸ் தயாரிப்பு நிறுவனம்  மற்றும் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் நிறுவனம்  இணைந்து இப்படத்தை தயாரித்து வருகிறது. மிஷ்கின், சமுத்திரகனி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் இப்படத்தில் நடிக்கும் நிலையில், ஜி.வி.பிரகாஷ் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.


முன்னதாக வணங்கான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஒரு கையில் பெரியார் சிலை, மறு கையில் பிள்ளையார் சிலை என உடல் முழுவதும் சேற்றை அப்பிக்கொண்டு அருண் விஜய் நிற்கும் போஸ்ட வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்க்கது.