கல்கி 2898 ஏடி


பிரபாஸ் நடித்து நாக் அஸ்வின் இயக்கியுள்ள கல்கி  படம் கடந்த ஜூன் 27 ஆம் தேதி வெளியானது. அமிதாப் பச்சன் , தீபிகா படூகோன் , கமல்ஹாசன் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். கல்கி திரைப்படம் உலகளவில் 600 கோடிகளுக்கும் மேலாக வசூலித்துள்ளது. பல்வேறு  நடிகர்கள் இப்படத்தில் கெளரவ தோற்றத்தில் நடித்துள்ள நிலையில் அர்ஜூன் தாஸ் இப்படத்தில் கிருஷ்ணர் கதாபாத்திரத்திற்கு டப்பிங் கொடுத்துள்ளார். இப்படத்தில் அமிதாப் பச்சனுடன் பேசிய தனது அனுபவத்தை அர்ஜூன் தாஸ் பகிர்ந்துகொண்டுள்ளார்


 


அமிதாப் பச்சனின் குரலை மிமிக்ரி செய்து பார்த்திருக்கிறேன்






சில வாரங்களுக்கு முன்பு ஸ்வப்னா இடமிருந்து எனக்கு ஒரு அழைப்பு வந்தது, அவர் "நீங்கள் கல்கியில் கிருஷ்ணருக்கு டப்பிங் செய்ய வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்" என்று சொன்னார்.  முதலில் நான் கொஞ்சம் தயங்கினேன். ஆனால் பிறகு அவர் இரண்டு விஷயங்களைச் சொன்னார்  "நீங்கள் அமிதாப் பச்சனுடன் பேச வேண்டும். என்னை நம்பி வாருங்கள்”. சிறுவயதிலிருந்தே பள்ளி மற்றும் கல்லூரியில்  ஒரு ரசிகனாக அமிதாப் பச்சனின் குரலை நான் மிமிக்ரி செய்ய முயன்றிருக்கிறேன்.  நான் ஹைதராபாத்தில் உள்ள ஸ்டுடியோவிற்கு சென்றதும் அமிதாப் சாரின் டப்பிங்கை போட்டுகாட்டச் சொன்னேன். பள்ளி காலத்தில் இருந்து அவரது வாய்ஸை பலரிடம் பேசி காட்டிய நான் இப்போது அமிதாப் பச்சனின் குரலை கேட்டுக் கொண்டு இருந்தேன். அவர் பேசுவதை கேட்டு எல்லாவற்றையும் புரிந்துகொள்ள எனக்கு கொஞ்ச நேரம் ஆனது. என் இளமை காலத்தில் இருந்து எல்லா நினைவுகளும் என் மனதில் ஓடத் தொடங்கின. பின் சிறிது நேரத்திற்கு பிறகு பேசத் துவங்கினேன்.


அடுத்த மூன்று நாட்கள் தனது பிஸியான ஷெடியூலிலும் இயக்குநர் நாக் அஸ்வின் எனக்காக நேரத்தை ஒதுக்கி என்னை வழி நடத்தினார். துரதிர்ஷ்டவசமாக நேரம் பற்றாக்குறையால்  என்னால் தெலுங்கு மற்றும் இந்தியில் மட்டுமே டப்பிங் பேச முடிந்தது. இயக்குநர் நாக் அஸ்வின் மற்றும் ஸ்வப்னா ஆகிய இருவருக்கும் நன்றி . நீங்கள் இருவரும் கற்பனை செய்ததை ஓரளவிற்கேனும் நான் என்னுடைய குரலில் கொண்டு வந்திருக்கிறேன் என்று நம்புகிறேன். படம் பார்த்து என்னை பாராட்டிய அனைவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  இந்த பிரம்மாண்டமான படத்தில் என்னையும் ஒரு உறுப்பினராக சேர்த்துக் கொண்டதற்கு நாக் அஸ்வின் , வைஜயந்தி மூவிஸ் , பிரபாஸ் , தீபிகா படூகோன் , கமல்ஹாசன் மற்ற  படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. யாராவது என்னிடம் என்னிடம் பணம் , புகழ் , கார் பங்களா எல்லாம் இருக்கிறது உன்னிடம் என்ன இருக்கிறது என்று கேட்டால் அமிதாப் பச்சன் சாருடன் எனக்கு ஒரு டயலாக் இருக்கிறது என்று பெருமையாக சொல்வேன்.