தமிழ் சினிமாவில் பலரும் தங்கள் சாதியை வெளிக்கொணரவே படம் இயக்குகிறார்கள் என இயக்குநர் சமுத்திரகனி தெரிவித்துள்ளார். 


மறைந்த இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரிடம் உதவி இயக்குநராக இருந்து உன்னை சரணடைந்தேன் படம் மூலம் இயக்குநரானவர் சமுத்திரகனி. தொடர்ந்து நெறஞ்ச மனசு, நாடோடிகள், போராளி, அப்பா, தொண்டன்,நிமிர்ந்து நில் என சில படங்களை இயக்கினார். சுப்பிரமணியபுரம் படம் மூலம் நடிகராக அறியப்பட்ட சமுத்திரகனி, இன்று படம் இயக்க முடியாத அளவுக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் பிஸியான நடிகராக வலம் வருகிறார். 


இப்படியான நிலையில் சில வாரங்களுக்கு முன் கேரளாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட நிகழ்ச்சியில் பங்கேற்ற சமுத்திரகனியிடம் பல கேள்விகள் எழுப்பப்பட்டது. ஒவ்வொரு கேள்விக்கும் பொறுமையாக பதிலளித்தார். அப்போது,  பா.ரஞ்சித் போன்றவர்களை குறிப்பிட்டு தமிழ் சினிமாவில் தலித் மக்களின் செயல்பாடுகள் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. 






அதற்கு, “பா.ரஞ்சித் என்னுடைய சகோதரர் தான். அவர் இயக்கி ரஜினிகாந்த் நடித்த காலா படத்தில் நான் நடித்துள்ளேன். சினிமாவில் தலித் மட்டுமல்லாது எல்லா மொழிகளிலும் இத்தகைய செயல்பாடுகள் என்பது உள்ளது. தமிழ் சினிமாவை எடுத்துக் கொண்டால், நிறைய இயக்குநர்கள் தாங்கள் சார்ந்த சாதியை வெளிக்கொணரவே படம் எடுக்கிறார்கள். அதில் என்னைப் போன்ற சிலர் மட்டும் தான் எல்லாரும் ஒன்று என சொல்லிக் கொண்டிருக்கிறோம்


மற்றவர்கள் தங்கள் சாதியை தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் ஒரு இயக்குநர் எந்த சாதியை சார்ந்தவரோ, அந்த சமுதாயத்தில் தான் கேமராமேன், ஆர்ட் டைரக்டர், நடிகர், நடிகைகளை வைத்துக் கொள்வார்கள். அவர்களால் முடியவில்லை என்றால் தான் வேறு சாதியைச் சேர்ந்தவர்களை தங்கள் படங்களில் பயன்படுத்துகிறார்கள். இது தமிழ் மட்டுமல்லாது அனைத்து துறைகளிலும் உள்ளது. இதை நான் தெலுங்கில் பார்த்திருக்கிறேன்” என தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. 


சமுத்திரகனியின் ராமம் ராகவம்


சமுத்திரகனி தற்போது தனராஜ் கொரனானி இயக்கத்தில் ராமம் ராகவம் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் சில தினங்களுக்கு முன் வெளியானது. அப்பா மகன் உறவை வைத்து உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் ரசிகர்களை கவர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.