பிரபல இயக்குனரும், நடிகருமான பிரதாப் போத்தன் இன்று காலமானார். தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் கொடிகட்டி பறந்த அவர், கடந்த ஆண்டு அளித்த பேட்டி மிக முக்கியமானது. இதோ அந்த பேட்டி...


‛‛என்னை சினிமாவில் கொண்டு வந்தது பரதன் தான். ஹரி போத்தன் என்னை தடுக்க நிறை முயற்சித்தார். என்னை சினிமாவுக்கு கொண்டு வரக்கூடாது என பரதனை மிரட்டியது என் அண்ணன் ஹரி போத்தன். ஆனால் பரதன் அதை உதறி என்னை அறிமுகப்படுத்தினார். 


கல்லூரி நாளில் நிறைய நிகழ்ச்சிகளை செய்திருந்ததால் மேடை அனுபவம் இருந்தது. அது தான், நான் நடிகனாக மாறவும் காரணமானது. கரையெல்லாம் செண்மகப்பூவில் நான் தான் நடிப்பதாக இருந்தது. தயாரிப்பாளர், என்னை நடிகராக ஏற்க மறுத்துவிட்டார். பாலுமகேந்திராதான் ,என்னை முதலில் நடிக்க தேர்வு செய்தார். காத்திருக்க வைத்து, மூடிபனியில் நடிக்க வைத்தார்.


அதன் பின் பாலசந்தரர், மகேந்திரன் என முன்னணி இயக்குனர்களும் என்னை அழைத்தனர். கிட்டத்தட்ட முன்னணி இயக்குனர்கள் அனைவரிடமும் நான் நடித்து விட்டேன். பாரதிராஜா, மகேந்திரன், பாலசந்தர், பாலுமகேந்திரா என அனைவருக்கும் ஒவ்வொரு வித்தியாசம் இருக்கிறது. ஒவ்வொவரும் ஒவ்வொருவரிடமிருந்து திறமையால் வேறுபடுகிறார்கள். அவர்களிடம் நடிக்கும் போது, இயக்குவதை எளிதில் கற்க முடிந்தது. 


நான் ஹீரோ ஆவேன் என்ற நம்பிக்கையே இல்லை. இயக்குனர் தான் எனக்கு இலக்கு. உண்மையை சொல்ல வேண்டுமானால், அதற்காக தான் நடித்தேன். மீண்டும் ஒரு காதல் கதை , முதன் முதலில் நடித்து, இயக்கி, தயாரித்த படம். அந்த படத்திற்கு இளையராஜா என்னிடமிருந்து ஒரு பைசா கூட வாங்கவில்லை. 


கோடைகால காற்றே, என் இனிய பொன்னிலாவே என அருமையான பாடல்களை தந்தவர் இளையராஜா. சிவாஜி, மோகன்லாலை வைத்து யாத்ரா மொழி என்கிற படத்தை மலையாளத்தில் செய்தேன்; அதற்கும் இளையராஜா தான் இசை. வெற்றி விழா படத்தின் மீது கமலுக்கு நம்பிக்கை இல்லை. அப்போது அவரது மனைவியாக இருந்த சரிகா, அந்த படத்தை விரும்பவில்லை. படம் வெற்றி அடைந்த பிறகு, சரிகாவால் என்னிடம் பேச முடியவில்லை. வெற்றி விழாவை இப்போது தான் எடுத்திருக்க வேண்டும். இப்போது உள்ள வசதி அப்போது இல்லை. 


சிவாஜி புரொடக்ஷனில் இரு படங்கள் செய்தேன். இரண்டும் நல்ல வாய்ப்பு. என்னுடைய பெரும்பாலான படங்களில் சில்க் இருப்பார். சில்க் மீது எனக்கு நிறைய அன்பு உண்டு. அவரை எனக்கு பிடிக்கும். அவர் மிக அருமையான பெண்மணி. ஸ்கிரீனில் அவர் வந்தால், அப்படி இருக்கும். அசோக்குமார் என்னுடைய முதல் படத்திலிருந்து என்னுடன் பயணித்தார்.அவர் நல்ல ஒளிப்பதிவாளர்.


தகரா, ஸாமரம், ஆயாலும் நானும் ஆகிய மலையாள படங்கள் எனக்கு மிகவும் பிடித்த படங்கள். தமிழில் வெற்றி விழாவும், ஜீவாவும் நான் இயக்கத்தில் எனக்கு பிகவும் பிடித்த படங்கள். ஆரம்பத்தில் ஆர்ட் ப்லிம்  மாதிரி படங்களை செய்து கொண்டிருந்த நான், அதன் பின் கமர்ஷியல் படங்களை செய்தேன். 


என் படங்களில் எனக்கு ரொம்ப கம்போர்ட் கொடுத்த ஹீரோக்கள் சத்யராஜ், மோகன் லால், சிவாஜி சார் ஆகியோர் தான். சிவாஜி சார் முகத்தில் குளோஸ்அப் வைத்தால் அவ்வளவு உணர்ச்சிகளை அவர் வெளிப்படுத்துவார். 1998 க்கு பிறகு அடுத்த 8 ஆண்டுகுள் கழித்து தான் நடிக்கவே வந்தேன். இந்த இடைப்பட்ட காலத்தில் விளம்பரப்படங்களைஇயக்க ஆரம்பித்தேன். 


மார்க்கெட்டில் இருக்கிறேன் என்பதை காட்டுவதற்காக நான் படத்தில் தலைகாட்ட விரும்பவில்லை. நல்ல படங்களை தேர்வு செய்து நடிக்கலாம் என முடிவு செய்தேன். நடிப்பு தான் சிறந்து; அது மாதிரி ஒரு தொழில் இல்லவே இல்லை. அதில் இல்லாமே கிடைக்கும். ஆனால், நான் இயக்குனர் என்பதை தான் விரும்புவேன். 


வெற்றி விழா படத்தில் கமல் பிடிக்காமல் தான் நடித்தார். ஆனால், கேமராவுக்கு முன்னால் வந்துவிட்டதால், அவர் பிடித்தது, பிடிக்காதது என்பதை தாண்டி மிக நன்றாக நடித்தார். ரஜினியை நான் இயக்கவேண்டிய படத்தில் என்னை மாற்றிவிட்டார். அதற்கு பலர் காரணமாக இருந்தார்கள். 


சுஹாசினி, ராதிகா ஆகியோர் மிக திறமையானவர்கள். ராதிகா என்னுடைய நெருங்கிய தோழி. எப்போதும் என்னுடைய நெருங்கிய தோழி அவர். மாதவி, ஸ்ரீதேவி ஆகியோரும் எனக்கு நல்ல தோழிகள். இளமை கோலம் படத்தில்தான் ராதிகா உடன் முதலில் நடித்தேன். அதன் பிறகு தான் காதல், திருமணம். வாழ்க்கையில் நிறைய பேரை சந்திப்போம், பிரிவோம். இதையெல்லாம் கடந்து, அதில் கிடைத்த நல்ல அனுபவங்களைத்தான் பார்க்க வேண்டும் . வாழ்க்கை கூட ஒரு நல்ல அனுபவம் தான். 


இளையராஜா 1000 நிகழ்ச்சிக்கு சென்ற என்னை சரிவர அவர் நடத்தவில்லை. அது எனக்கு பிடிக்கவில்லை, அதனால் வெளியேறிவிட்டேன். 80ஸ் ரீயூனியனில் என்னை அழைக்கவில்லை; அதுவும் எனக்கு வருத்தமாக இருந்தது. என்னை அழைக்கவில்லை என்றாலும் என் பெயர் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் பேஸ்புக்கில் என் வருத்தத்தை பதிவு செய்தேன். 


இப்போது நடித்துக்கொண்டு மட்டுமே இருக்கிறேன். ஆனால், இயக்க முடியவில்லையே என வருத்தமாக உள்ளது. இப்போதுள்ள இளைஞர்களை வைத்து படம் எடுப்பது எனக்கு எளிதாக இருக்கும். இப்போது எனது படம் வந்தால் அது ரொம்ப வித்யாசமாக இருக்கும். 


சூர்யா, தனுஷ் எனக்கு தமிழில் தற்போது பிடித்த நடிகர்களாக உள்ளனர். வெற்றி மாறனின் எல்லா படங்களையும் பார்க்கிறேன். அவர் நல்ல இயக்குநர். அமலா பால் எனக்கு பிடித்த நடிகை. இப்போது படங்களுக்கு 100 கோடி, 200 கோடி என்கிறார்கள். ஆனால், அதில் பெருந்தொகை நடிகர்களுக்கு தான் போகிறது. கதைக்கு செலவழிப்பது என்ன என்பது தான் கேள்வி. ஹாலிவுட்டில் கூட இது கிடையாது. ரசிகர் மன்றங்கள் இருந்தால் இப்படித்தான் வரும். 


என்னுடைய 40 வருட சினிமா பயணம் எனக்கு முழு திருப்தியளித்திருக்கிறது. வேறு துறையை நான் சேர்ந்திருந்தால், எனக்கு இந்த திருப்தி கிடைத்திருக்காது. ஏற்றம் இறக்கம் எல்லாம் இயல்பாக எல்லா துறையிலும் வருவதுதான். அதை கடந்து சினிமா எனக்கு அலாதியானது,’’


என்று அந்த இணையதள பேட்டியில் பிரதாப் போத்தன் கூறியுள்ளார்.