வனத்துறை அதிகாரி ஒருவரின் ஷூவில் இருந்து சிறிய நல்ல பாம்பு ஒன்று மீட்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநில வனத்துறை அதிகாரியாகச் செயல்பட்டு வருபவர் சுசந்தா நந்தா. இவர் தனது ட்விட்டரில் தொடர்ச்சியாக வனத்துறை சார்ந்த பல வீடியோக்களை பகிர்ந்து வருபவர்.அண்மையில் இவர் பகிர்ந்த வீடியோ ஒன்று தற்போது  வைரலாகி வருகிறது. 






சுசந்தா பகிர்ந்த வீடியோவில் அதிகாரி ஒருவர் ஷூ ரேக்கில் இருக்கும் ஒரு ஸ்போர்ட்ஸ் ஷுவில் வளைந்த அலுமினியக் கம்பி ஒன்றை நுழைக்கிறார். நாம் என்னவாக இருக்கும் என யோசிக்கும் அடுத்த நொடியில் அதை அடுத்து ஷூவில் இருந்து திடீரென ஒரு நல்ல பாம்பு படம் எடுத்தபடியே சீறும் சத்தத்துடன் எட்டிப் பார்க்கிறது. பார்ப்பதற்கு 20 செமீ நீளம் என யூகிக்கும் அளவுக்கு இருக்கும் அந்த சிறிய பாம்பை அந்த அதிகாரி மிகவும் உஷாராக ஷூவில் இருந்து எடுக்கிறார். 






அதனை எடுத்தபடியே அவர் பார்ப்பவர்களுக்கு அறிவுரை கூறுகிறார். அதில்,’இதனால்தான் மழைக்காலத்தில் உங்கள் ஷூக்களை நன்கு உதறிவிட்டு பரிசோதனை செய்துவிட்டு அணிந்து கொள்ள சொல்கிறோம். வெளியில் ஈரம் இருப்பதால் அவை இதுபோன்ற இதமான இடங்களில் தஞ்சம் புகும்.அதனால்தான் உங்களை பாதுகாப்பாக முன்னெச்சரிக்கையுடன் இருக்கச் சொல்கிறோம். அது உங்கள் உயிரைப் பாதுகாக்கும்’ என்கிறார்.