நடிகர் அஜித்குமார் நடித்த வாலி படத்தில் ஒரு சீனை கடைசி வரை எடுக்க முடியாமல் இருந்ததாக இயக்குநர் மாரிமுத்து நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 


எஸ்.ஜே.சூர்யாவுக்கு நம்பிக்கை கொடுத்த அஜித் 


கடந்த 1999 ஆம் ஆண்டு எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் நடிகர் அஜித் முதன்முறையாக இரட்டை வேடத்தில் நடித்த படம் “வாலி”. இதில் ஹீரோயினாக சிம்ரன், ஜோதிகா இருவரும் நடித்தனர். விவேக் முக்கிய கேரக்டரில் நடிக்க படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். அஜித்தின் சினிமா கேரியரில் முக்கியமாக படமாக அமைந்த வாலி அறிமுக இயக்குநரான எஸ்.ஜே.சூர்யாவுக்கு விசிட்டிங் கார்டாக அமைந்தது. 


இயக்குநர் வசந்திடம் உதவி இயக்குநராக இருந்த எஸ்.ஜே.சூர்யாவை ஆசை படப்பிடிப்பின் போது அஜித் கவனித்துள்ளார். சுறுசுறுப்பாக வேலை செய்த எஸ்.ஜே.சூர்யாவிடம் எப்போது இயக்குநர் ஆகப்போகிறாய் என ஒருநாள் அஜித் கேட்டுள்ளார். உங்களை மாதிரி பெரிய ஹீரோ நடிச்சா இயக்க வேண்டியது தான் என சொல்லவும், அப்ப சரி நீ எடுக்குற படத்துல நான் நடிக்கிறேன்னு அஜித் வாக்குறுதி கொடுத்துள்ளார். 




அதன்படி பல ஸ்டேஜ்களுக்குப் பின்னரே வாலி படம் முழுமை பெற்றது. இந்த படத்தில் நடிகரும், இயக்குநருமான மாரிமுத்து பணியாற்றியிருந்தார். அவர் நேர்காணல் ஒன்றில் வாலி படம் பற்றிய பல தகவல்களை தெரிவித்துள்ளார். மாற்றுத்திறனாளி அண்ணன், கலகலப்பான தம்பி என இரண்டு வேடங்களிலும் அஜித் கலக்கியிருந்தார். அதற்கேற்றாற்போல் கதையும் சிறப்பாக இருந்தது. இந்த படத்தில் பல காட்சிகள் எடுக்க முடியாமல் போய்விட்டது.


எடுக்க முடியாமல் போன சீன் 


குறிப்பிட்டு ஒரு காட்சியை சொல்லலாம். தம்பி அஜித்தின் மனைவியாக வரும் சிம்ரன், அவர் என நினைத்து அண்ணன் அஜித்தை கட்டிப்பிடிப்பார். சிம்ரன் மேல் மோகம் கொண்ட அண்ணனோ எதுவும் சொல்லாமல் ரசிப்பார். அதேசமயம் உண்மை தெரிந்த பிறகு குற்ற உணர்ச்சியில் சிம்ரன் அப்செட்டில் பெட்டில் படுத்திருப்பார். 


அப்போது அந்த இடத்தில் ஒரு காட்சி வைக்கப்படுவதாக இருந்தது. அதாவது சிம்ரன் பெட்டில் படுத்திருக்கும்போது அந்த ரூமின் கதவை திறந்துகொண்டு ஒரு உருவம் தொப்பியை வைத்து முகத்தை மறைத்தபடி வரும். அந்த உருவம் அஜித் தான் என்பது ரசிகர்களுக்கு தெரியும். ஆனால் சிம்ரனுக்கோ அந்த உருவம் வர வர ஒருவேளை திரும்பவும் அண்ணன் அஜித் தான் வருகிறாரோ என ஹீரோயினுக்கு பயம் தொற்றிக் கொள்ளும்.


ஆனால் பக்கத்தில் வந்து தொப்பியை விலக்கி முகத்தை காட்டினால் அங்கு தம்பி அஜித் மீசையில்லாமல் இருப்பார். அவர் எப்படி இருக்கு என பேசும்போது தான் சிம்ரன் நிம்மதியடைவார். எதுக்கு மீசையை எடுத்த என்று சிம்ரன் கேட்க, உனக்காகத்தான் என தெரிவிப்பார்.  மீசையோடு அண்ணன் இருப்பார். இனி உனக்கு வித்தியாசம் தெரிந்துவிடும் என்று அஜித் தெரிவிக்க,  ஹீரோ மீது ஹீரோயினுக்கு காதல் கூடும். 


மீசை எடுக்க மறுத்த அஜித்:


உடனடியாக அண்ணன் அஜித்திடம் விஷயத்தை சொல்ல தம்பி அஜித்தை சிம்ரன் அழைத்து செல்வார். அந்த காட்சியில் அண்ணன் அஜித் பின்னாடி திரும்பியபடி இருப்பார். சர்ப்ரைஸ் கொடுப்பதாக நினைத்து தம்பி அஜித் அவரை திருப்ப, பார்த்தால் அங்கே அண்ணன் அஜித்தும் மீசையில்லாமல் இருப்பார். 


ஆனால் அப்போது அஜித் வேறு ஒரு படத்தில் கமிட் ஆகி இருந்ததால் மீசை எடுக்க மறுத்துவிட்டார்.கடைசியாக கூட இந்த காட்சியை எடுத்துக் கொள்ளலாம் என எஸ்.ஜே.சூர்யா சொல்லியும் அந்த காட்சி எடுக்க முடியாமல் போய்விட்டது என நேர்காணலில் மாரிமுத்து தெரிவித்துள்ளார்.