என்னுடைய சில படங்களுக்கு நான் இசையமைத்ததை கண்டு இளையராஜா மிகவும் கோபப்பட்டார் என நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 


திரைக்கதை மன்னன் என சினிமாவில் அனைவராலும் கொண்டாடப்படுபவர் பாக்யராஜ். இயக்குநர் இமயம் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக இருந்த அவர் பின்னர் தமிழ் சினிமாவில் பல இயக்குநர்களுக்கும் முன்மாதிரியாக திகழ்ந்தார். குறிப்பாக இயக்குநர்கள் பார்த்திபன், பாண்டியராஜ் உள்ளிட்டோர் பாக்யராஜிடம் தான் உதவி இயக்குநர்களாக பணியாற்றினார்கள். இப்படியான நிலையில் நடிப்பு,இயக்கம், தயாரிப்பு என பன்முக திறமைக் கொண்ட பாக்யராஜ் சில படங்களுக்கும் இசையமைக்க செய்துள்ளார். 


1988 ஆம் ஆண்டு வெளியான இது நம்ம ஆளு படத்தின் மூலம் இசையமைப்பாளராக களம் கண்ட கே.பாக்யராஜ், பின்னர் தான் நடித்த ஆராரோ ஆராரிராரோ, பொண்ணு பார்க்க போறேன், பவுனு பவுனு தான் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்தார். அவரின் இசையில் பல பாடல்களும் ஹிட்டடித்து. இப்படியான நிலையில் ஆரம்ப காலத்தில் பாக்யராஜ் படங்களுக்கு கங்கை அமரன், அதனைத் தொடர்ந்து இளையராஜா இசையமைத்தார். 


ஆனால் ஒரு கட்டத்தில் பாக்யராஜே இசையமைத்தார். இதனைத் தொடர்ந்து ராசுக்குட்டி படத்தில் தான் மீண்டும் இளையராஜா இசையமைத்தார். இந்த இடைவெளி ஏன் என்பதை நேர்காணல் ஒன்றில் பாக்யராஜ் தெரிவித்துள்ளார். அதில், “சின்ன வீடு படத்துக்கு பின் என்னுடைய சில படங்களுக்கு இளையராஜா இசையமைக்கவில்லை. அந்த சமயம் அவரை சுற்றி இருந்தவர்கள் என்ன சொன்னார்கள் என தெரியவில்லை.


அதனால் நானே என் படங்களுக்கு இசையமைக்க தொடங்கினேன். 1992 ஆம் ஆண்டில் பாரதிராஜா, பாலசந்தர் என பெரிய இயக்குநர்கள் இளையராஜாவை விட்டு வெளியே போக தொடங்கினார்கள். அந்த சமயத்தில் நான் ராசுக்குட்டி படத்தின் வேலைகளில் இருந்தேன். அப்போது கங்கை அமரன் என்னிடம் வந்து, ‘இளையராஜா அண்ணன் உங்க படத்துக்கு இசையமைக்க விருப்பப்படுகிறார்’ என சொன்னார். அப்படியே அவரிடமும் அழைத்து சென்றார். 


நான் சென்று பார்த்தபோது இளையராஜ உர்ரென்று இருந்தார். என்னை பார்த்ததும், ‘நான் ஆர்மோனிய பெட்டியை சரஸ்வதி தெய்வமாக பார்க்கிறேன். நீ எப்படி மியூசிக் பண்ணலாம்’ என கோபமாக பேச ஆரம்பித்தார். இது என்னடா புது வம்பா போச்சு என மனசுல நினைச்சிகிட்டேன். மேலும் இளையராஜாவிடம், ‘நியாயமா நான் வேறு ஒரு இசையமைப்பாளரை தேடி சென்று என் படத்துக்கு இசையமைச்சிருந்தா தான் என் மேல நீங்க கோபப்பட்டிருக்கணும். இளையராஜாவின் இசை தான் நமக்கு கிடைக்கல, அதனால வேற இசையமைப்பாளரை தேடி போக மனசு வராம தான் நாமே இசை அமைக்கலாம்ன்னு நினைச்சி தான் இசையமைச்சேன். ஏன் நீங்க கும்பிடுற சரஸ்வதி சாமியை நானும் கும்பிடக்கூடாதா? என திருப்பி கேட்டதும் சிரிச்சிட்டார்.