லண்டனில் உள்ள பிரபல அருங்காட்சியகத்தில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு மெழுகு சிலை வைத்து கெளரவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவல் அவரது ரசிகர்களை உற்சாகத்தில் அழ்த்தியுள்ளது.


 


அல்லு அர்ஜுன்


தெலுங்கு சினிமாவில் ஸ்டைலிஷ் ஸ்டார் என்று அழைக்கபடுபவர் நடிகர் அல்லு அர்ஜுன். தெலுங்கு மட்டும் இல்லாமல் தமிழ் , இந்தி , கன்னடம் என பிற மொழி திரைப்படம் ரசிகர்களும் அல்லு அர்ஹுனுக்கு மிகப்பெரிய ரசிகர்களாக இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக புஷ்பா திரைப்படத்தில் சிறப்பான  நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் அல்லு அர்ஜுன். இந்தப் படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது அவருக்கு வழங்கப் பட்டது. இதனால் மகிழ்ச்சியடைந்த அவரது ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடினார்கள். புஷ்பா படத்தின் படக்குழு சார்பாக சிற்ப்பு நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப் பட்டு அவருக்கு பாராட்டு விழாவும் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது அவரை மேலும் கெளரவிக்கும் வகையில் மேலும் ஒரு புதிய முயற்சி மேற்கொள்ளப் பட இருக்கிறது.


மெழுகில் சிலை


லண்டனில் உள்ள மடம் துஸ்ஸாட்ஸ் அருங்காட்சியகம் பிரபலங்களின் மெழுகு சிலைகளை உருவாக்கி அருங்காட்சியகத்தில் வைத்து கெளரவித்து வருகிறது. பல்வேறு உலக நாடுகளைச் சேர்ந்த பிரபலங்களின் தத்ரூபமான மெழுகு சிலைகள் இந்த அருங்காட்சியகத்தில் வைக்கப் பட்டுள்ளன. இந்ந்லையில் இந்த அருங்காட்சியகத்தில் நடிகர் அல்லு அர்ஜுனின் சிலையும் வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. முன்னதாக தெலுங்கு நடிகர்களான பிரபாஸ் மற்றும் மகேஷ் பாபு ஆகிய இரண்டு நடிகர்களுக்கு மெழுகு சிலை நிறுவப்பட்டதைத் தொடர்ந்து தற்போது மெழுகில் வார்க்கப்பட இருக்கும் மூன்றாவது தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் என்பது குறிப்பிடத் தக்கது.


தற்போது புஷ்பா 2 படத்தின் படப்பிடிப்பில் படு பிஸியாக இருக்கும் நிலையில் தனது இரண்டு நாள் படப்பிடிப்பை ஒதுக்கி வைத்துவிட்டு லண்டன் செல்ல இருக்கிறார். அவரது உருவத்தை உருவாக்க உடல் அளவு எடுப்பதற்கான பணிகள் லண்டனில் தொடங்க இருக்கிறது.


புஷ்பா 2






 


கடந்த 2021ம் ஆண்டு சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ராஷ்மிகா மந்தனா, சுனில், அனசூயா, தனஞ்செயா என பலர் நடித்திருந்த படத்திர்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்திருந்தார். இந்த படம் தெலுங்கு, தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி வசூலில் சாதனை படைத்தது. படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்களும் மெகா ஹிட் அடித்து டிரெண்டானது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையில், ஆண்ட்ரியா பாடிய ம்ம் சொல்றீயா.. ம்ம்ம் சொல்றீயா பாடலும், அந்த பாடலில் இடம்பெற்ற சமந்தாவின் நடனமும் படத்தை இந்தியா முழுவதும் கொண்டு சென்றது. முதல் பாகத்தை போலவே 2ம் பாகத்திலும் இந்தியா முழுவதும் சென்றடையும் விதத்தில் ஒரு குத்து பாடலை உருவாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. 


மைத்ரி மூவீ மேக்கர்ஸ் தயாரித்து சுகுமாறன் இயக்கி வரும் புஷ்பா 2 இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளது. அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்டவர்கள் நடித்து வருகிறார்கள். தேசிய விருது வென்ற தேவி ஸ்ரீ பிரசாத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். அடுத்த ஆண்டு 2024 ஆகஸ்ட் 15 ஆம் தேதி புஷ்பா 2 திரைப்படம் திரையில் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.