நடிகர் அஜித் நடித்துள்ள “விடாமுயற்சி” படத்தின் அப்டேட் நாளை வெளியாகும் என அவரின் மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 


நடிகர் அஜித் கடைசியாக கடந்தாண்டு துணிவு படத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்தாண்டு பொங்கலுக்கு வெளியானது. இதனைத் தொடர்ந்து ஒன்றரை ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் அவரின் அடுத்தப்படம் எப்போது வெளியாகும் என தெரியாத நிலை உள்ளது. ஆனால் அஜித் விடாமுயற்சி, குட் பேட் அக்லி என இரண்டு படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார். இதில் விடாமுயற்சி படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. முதலில் இந்த படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. 


தொடர்ந்து ஏற்பட்ட பல்வேறு நிகழ்வுகளை தொடர்ந்து இயக்குநர் மாற்றப்பட்டார். புதிய இயக்குநராக மகிழ் திருமேனி ஒப்பந்தம் செய்யப்பட்டார். விடாமுயற்சி படத்தில் திரிஷா, அர்ஜூன், ஆரவ் என பலரும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்து இந்த படம் அஜர்பைஜான், சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அவ்வப்போது ஷூட்டிங் நடந்து வந்தது. ஓராண்டுக்கும் மேலாக ஷூட்டிங் நடைபெற்று வரும் நிலையில் அவ்வப்போது அப்டேட் வெளியாகும்.






கடந்த ஏப்ரல் 4 ஆம் தேதி, கடந்தாண்டு நவம்பரில் எடுக்கப்பட்ட விடா முயற்சி படத்தின் ஸ்டண்ட் காட்சிகளை அஜித்தின் மேனேஜரான சுரேஷ் சந்திரா வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து ஜூன் 24 ஆம் தேதி அஜர்பைஜானில் மீண்டும் ஷுட்டிங் தொடங்கியதாக ஒரு அப்டேட் வெளியானது. இதற்கிடையில் அஜித்தை வைத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் குட் பேட் அக்லி படத்தின் 2 போஸ்டர்கள், ரிலீஸ் தேதி எல்லாம் வெளியானது. இதனால் விடாமுயற்சி அப்டேட் விட வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்தனர். 


இப்படியான நிலையில் நாளை (ஜூன் 30) விடாமுயற்சி பட அப்டேட் இரவு 7.03 மணியளவில் வெளியாகும் என சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார். கண்டிப்பாக விடா முயற்சி படத்தின் ரிலீஸ் தேதியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக வரும் தீபாவளிக்கு படத்தை வெளியிட லைகா நிறுவனம் முடிவு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.