தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித்குமார். உச்சநட்சத்திரமாக உலா வரும் இவருக்கு என்று கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.


கார் பந்தயத்தில் கலக்கும் அஜித்:


நடிகராக மட்டுமின்றி இவர் சிறந்த கார்பந்தய வீரர் ஆவார். பைக், கார் ஓட்டுவதில் அலாதிப் பிரியம் கொண்ட அஜித்குமார் பல பந்தயங்களிலும் சிறு வயது முதலே பங்கேற்று வருகிறார். தற்போது அவரது நடிப்பில் விடாமுயற்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், குட் பேட் அக்லி படத்திலும் நடித்து வருகிறார்.


சமீப காலமாக மீண்டும் கார் மற்றும் கார் பந்தயங்களின் மீது தனது கவனத்தை திருப்பியுள்ள அஜித்குமார் துபாய் மற்றும் வெளிநாடுகளில் கார்களில் உலா வரும் புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியாகி அவரது ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது.

வெளியானது அஜித்தின் க்ளிக்ஸ்:






இந்த சூழலில், தற்போது துபாயில் நடைபெற்ற கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமார் பங்கேற்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. துபாயில் உள்ள புகழ்பெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற அஜித்குமாரின் புகைப்படங்கள் வெளியாகி இருப்பது அவரது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. இந்த ரேஸ்  எப்போது நடைபெற்றது? இதில் யார் வெற்றி பெற்றார்? என்பது குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.


நடிகர் அஜித் கார் மற்றும் பைக் பந்தயங்கள் மட்டுமின்றி புகைப்பட கலைஞர், ட்ரோன் வடிவமைப்பாளர், துப்பாக்கிச்சுடும் வீரர் என பல பரிமாணங்களை கொண்டவர். துப்பாக்கிச்சுடும் போட்டியிலும் அவர் மாநில அளவில் ஏராளமான பதக்கங்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


விடாமுயற்சி, குட் பேட் அக்லி:


நடிகர் அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் உள்பட வெளிநாட்டிலே முழுக்க முழுக்க நடைபெற்றது. இந்த படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பும் ஒரு புறம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


அஜித் தற்போது நடிக்கும் விடாமுயற்சி படத்தில் அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். இவர்களுடன் அர்ஜூன், சஞ்சய் தத், ஆரவ், ரெஜினா என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.