தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திர நடிகர்களில் ஒருவர் அஜித். கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட இவர் நடிப்பில் விடாமுயற்சி படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. அஜித், த்ரிஷா, அர்ஜூன், ஆரவ், ரெஜினா என நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர்.

டப்பிங்கை முடித்த அஜித்:


பல சிக்கல்களுக்கு பிறகு தொடங்கப்பட்ட விடாமுயற்சி படம் கடந்த இரண்டு ஆண்டுகளாக படப்பிடிப்பில் உள்ளது. விடாமுயற்சி படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, அஜித் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.


விடாமுயற்சிக்குப் பிறகு தொடங்கப்பட்ட குட் பேட் அக்லி படம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில், அஜித்தின் விடாமுயற்சி படம் பற்றிய எந்த அப்டேட்டும் வெளியாகமாலே இருந்தது. இந்த நிலையில் விடாமுயற்சி படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது முதலே படத்தின் மீதான எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.







வைரலாகும் போட்டோ:


தற்போது விடாமுயற்சி படத்திற்கான டப்பிங்கை நடிகர் அஜித்குமார் பேசி முடித்துள்ளார். இதற்கான புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை அஜித் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். விடாமுயற்சி படத்திற்கான டப்பிங்கை அஜர்பைஜான் நாட்டில் பேசி முடித்துள்ளார். படத்தின் சவுண்ட் என்ஜினியர் தெளஃபன் மேஹ்ரி, இயக்குனர் மகிழ் திருமேனி ஆகியோருடன் அஜித் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


நடிகர், புகைப்பட கலைஞர், ரேஸ் ஓட்டுனர், ட்ரோன் வடிவமைப்பாளர், துப்பாக்கிச் சுடும் வீரர் என பன்முகம் கொண்ட அஜித் அடுத்தாண்டு துபாயில் நடைபெற உள்ள ஃபார்முலா கார் பந்தயத்திற்காக தயாராகி வருகிறார். அதில் அஜித்குமார் ரேஸிங் என்ற பெயரில் அவரது அணி பங்கேற்க உள்ளது. அதற்காக முழு மூச்சில் அஜித் தயாராகி வருகிறார்.


மேலும், குட் பேட் அக்லி படத்திலும் அஜித் தீவிரமாக நடித்து வருகிறார். குட் பேட் அக்லி படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். அந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். அஜித்திற்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். முதலில் பொங்கல் வெளியீடாக வரும் என்று அறிவிக்கப்பட்ட குட் பேட் அக்லி விடாமுயற்சி படம் காரணமாக ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


அடுத்தாண்டு அடுத்தடுத்து அஜித் படம் வெளியாக இருப்பதால் அஷித் ரசிகர்கள் உற்சாாகம் அடைந்துள்ளனர்.