நடிகர் அஜித் இன்று தனது 52வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவரது சினிமா கேரியரில் மிக முக்கியமான டாப் 10 படங்கள் பற்றி காணலாம். 


1. ஆசை 


1993 ஆம் ஆண்டு அமராவதி படம் மூலம் அஜித் தமிழில் அறிமுகமானாலும், அவருக்கு கேரியரில் முதல் வெற்றியை கொடுத்தது  1995 ஆம் ஆண்டு வெளியான “ஆசை” படம் தான். மணிரத்னம் தயாரிப்பில் வசந்த் இயக்கிய இப்படத்தில் நடிகை சுவலட்சுமி, நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பூர்ணம் விஸ்வநாதன் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர். 


2. காதல் கோட்டை


1996 ஆம் ஆண்டு அகத்தியன் இயக்கத்தில் அஜித், தேவயானி, ஹீரா நடித்து வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் “காதல் கோட்டை”. இப்படம்  சிறந்த தமிழ்ப் படம், சிறந்த கதை, சிறந்த திரைக்கதை ஆகிய மூன்று பிரிவுகளில் தேசிய விருதுகளை வென்றது. அதேசமயம்  தமிழக அரசின் விருதுகளை 5 பிரிவுகளை வென்றது. அஜித்துக்கு பேமிலி ஆடியன்ஸ்கள் கிடைக்க இப்படம் முக்கிய காரணமாக அமைந்தது. 


3. வாலி


1999 ஆம் ஆண்டு அஜித் இரட்டை வேடத்தில் முதல்முறையாக நடித்த படம் “வாலி”. எஸ்.ஜே.சூர்யா இயக்கிய இப்படத்தில் வாய் மற்றும் காது கேளாத இளைஞர் கேரக்டரில், வில்லத்தனத்தில் மிரட்டியிருந்தார் அஜித். இந்த படத்துக்காக தினகரன் சினிமா விருதுகளில் சிறந்த நடிகருக்கான விருதை வென்றார். இதுவே அவரின் முதல் விருதாகும். இதன்பின் இப்படத்துக்கு ஏராளமான விருதுகளை வென்றார். 


4. அமர்க்களம்


அவர் ஆக்‌ஷன் நாயகனாக அஜித் மாறத் தொடங்கியதில் 1999 ஆம் ஆண்டு அமர்களம் படத்திற்கு முக்கிய பங்குண்டு. அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் தான் நடிகை ஷாலினியுடன் காதல் ஏற்பட்டு, அடுத்த ஆண்டே திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்தார் அஜித். 


5. தீனா 


அஜித்தை ரசிகர்கள் செல்லமாக “தல” என அழைப்பார்கள். அதற்கு அடிப்படையாக அமைந்ததே தீனா படம் தான். இன்று வரையில் அந்த செல்ல பெயர் தொடர்கிறது. 


6. சிட்டிசன் 


இந்த படத்தில் அஜித் அரசியல்வாதி, அரசு அதிகாரி, முதியவர், மீனவர், காவல்துறை அதிகாரி, மெக்கானிக் உட்பட 9 வேடங்களில் வித்தியாசமாக நடித்திருந்தார். படத்தில் தந்தை - மகன் என இரண்டு வேடங்களிலும் கலக்கியிருப்பார். சிவாஜி கணேசன், கமல்ஹாசனுக்கு பிறகு அந்த காலக்கட்டத்தில் அதிக கெட்டப்பில் அஜித் தான் நடித்தார். 


7. முகவரி 


வாழ்க்கையில் விடா முயற்சி ஒருநாள் வெற்றியை கொடுக்கும் என்ற பால பாடத்தை கற்றுக் கொடுத்த படம் முகவரி. அஜித் ரசிகர்கள் மட்டுமல்லாது அனைத்து ரசிகர்களுக்கும் இப்படம் பிடிக்கும் என்பது குறிப்பிட வேண்டிய விஷயம். 


8. வரலாறு 


முதல்முறையாக தந்தை, 2 மகன்கள் என அஜித் 3 வேடங்களில் நடித்த படம் வரலாறு. குறிப்பாக அப்பா வேடத்தில் வரும் அஜித் நாட்டிய கலைஞராகவும் நடிப்பில் அசத்தியிருப்பார். தொடர் தோல்விகளால் துவண்டு கிடந்த அஜித்துக்கு இப்படம் புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்தது. 


9. பில்லா 


ரஜினிகாந்தின் பிரம்மாண்ட வெற்றிப் படமான ‘பில்லா’ படத்தை ரீமேக் செய்து அதில் அதே பெயரில் படம் நடித்தார். ஹாலிவுட் மேங்கிங் ஸ்டைலில் இரட்டை வேடத்தில் நடித்த இப்படம் அஜித்தின் கேரியரில் முக முக்கியமாக ஒன்றாக அமைந்தது. 


10.  மங்காத்தா 


அஜித்தின் 50ஆம் திரைப்படமாக உருவானது ‘மங்காத்தா’. முழுக்க முழுக்க வில்லன் குணங்கள் கொண்ட ஹீரோவாக மிரட்டினார். இந்த படத்தில் தான் சால்ட்  அண்ட் பெப்பர் லுக் கேரக்டரில் அவர் நடிக்க தொடங்கினார்.