தமிழ் சினிமாவின் ஸ்மார்ட் ஹீரோ அஜித்குமார் தற்போது போனி கபூர் தயாரிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் தற்காலிகமாக AK 61 என்று பெயரிடப்பட்டுள்ள திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபலமான மலையாள நடிகையான மஞ்சு வாரியர் நடிக்கிறார். இப்படம் இந்த ஆண்டு முடிவில் அல்லது 2023ம் தொடக்கத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பில் மிகவும் மும்மரமாக ஈடுபட்டுள்ளனர் படக்குழுவினர். கடைசி கட்ட படப்பிடிப்பு பாங்காக்கில் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.


தற்போது AK 61 படப்பிடிப்பில் இருந்து திரும்பிய அஜித்குமார் இமயமலைக்கு பைக்கில் பயணம் செய்துள்ளார். சென்னையில் இருந்து சில தினங்களுக்கு முன்னர் ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள லடாக்கிற்கு விமானம் மூலம் பயணம் செய்து அங்கிருந்து இமயமலைக்கு நண்பர்களுடன் சாலையில் பயணம் செய்துள்ளார் நடிகர் அஜித்குமார். இந்த பைக் பயணத்தை நான்கு நாட்கள் மேற்கொண்டுள்ளார். இமயமலை பயணத்தின் போது அவர் தனது நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளன. இந்த பயணத்தில் அஜித்துடன் AK 61 ஹீரோயின் மஞ்சு வாரியாரும் உள்ளார்.  இந்த இமாலய பயணத்தில் அஜித் பயன்படுத்திய பைக்கில் 'நெவர் எவர் கிவ் இட் அப்' என்ற வரிகள் எழுதப்பட்டுள்ளது. 






இந்த போட்டோக்கள் நேற்று வெளியாகி, தல ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில், அஜித் ஓட்டிச் சென்ற பைக்கிற்கான இன்சூரன்ஸ், கடந்த 2020 நவம்பர் 12 ம் தேதியோடு முடிவடைந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, மத்திய அரசின் வாகன விபரம் தொடர்பான இணையத்தில் பரிசோதித்த போது, அஜித் பைக் பற்றிய பல விபரங்கள் தெரியவந்தன. 


சென்னை தெற்கு ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட அந்த பைக், இன்றோடு வாங்கி 2 ஆண்டுகள் 9 மாதங்கள் ஆகின்றன. 2034 நவம்பர் 21 வரை வாகனத்திற்கான ஃப்ட்னஸ் சான்று வழங்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் தான், இன்சூரன்ஸ் காலம், 2020 நவம்பர் 12 வரை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இன்சூரன்ஸ் புதுப்பிக்காமல், அந்த பைக்கை அஜித் ஓட்டி வருவதும் தெரிய வருகிறது.


அஜித்குமார் என்கிற பெயரில் உள்ள அந்த பைக்கை தான், தற்போது இமயமலையில் சிகரம் சுற்றிக் கொண்டிருக்கிறார் அஜித். ரசிகர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக ஹெல்மெட் போட்டு தான் பைக் ஓட்டுவேன் என்று சினிமாவில் கறாராக இருக்கும் அஜித், இன்சூரன்ஸ் இல்லாத பைக்கை ஓட்டிச் செல்வது நியாயமா என்கிற கேள்வியை சிலர் எழுப்பியுள்ளனர். அத்தோடு, அஜித் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளனர்.