நடிகர் அஜித் நடித்துள்ள 61வது படமான துணிவு (Thunivu) கதை இதுதான் என்ற ஒரு தகவல் இணையத்தில் வைரலாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள நடிகர் அஜித் 3வது முறையாக தயாரிப்பாளர் போனி கபூர் - இயக்குநர் ஹெச்.வினோத் கூட்டணியில் அஜித் நடித்துள்ளார். இந்த கூட்டணியில் முதலில் நேர்கொண்ட பார்வை, கடைசியாக கடந்த பிப்ரவரி மாதம் வலிமை படம் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றது. இதனால் 3வது படத்தை பெரும் எதிர்பார்ப்போடு ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருந்தனர்.
அந்த வகையில் நேற்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் வெளியானது. அதன்படி இந்த படத்துக்கு “துணிவு” என பெயரிடப்பட்டுள்ளது. மாஸ் லுக்கில் கையில் துப்பாக்கியுடன் இருக்கும் போட்டோவும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த படத்தில் நாயகியாக பிரபல நடிகை மஞ்சுவாரியர் நடித்துள்ள நிலையில் ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். வங்கி கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இதன் படப்பிடிப்பு ஹைதராபாத், பாங்காங், விசாகப்பட்டினம் உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்றது.
ஏற்கனவே 80 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்து விட்ட நிலையில் மீதமுள்ள படப்பிடிப்பு தாய்லாந்து நாட்டில் நடைபெறுகிறது. இதற்காக படக்குழுவினர் அங்கு சென்று விட்ட நிலையில் அஜித் வரும் நாளை அங்கு செல்லவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் நடந்த ஒரு வங்கிக் கொள்ளையை அடிப்படையாக கொண்டு தான் இப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
கடந்த 1985ஆம் ஆண்டு போலீஸ் உடையில் பயங்கர ஆயுதங்களுடன் 15 சீக்கியர்கள் வங்கியில் கொள்ளையடிக்க சென்றனர். அவர்கள் கொள்ளையடித்த பணத்தின் மதிப்பு சுமார் 4.5 மில்லியன் அமெரிக்க டாலர் என கூறப்படும் நிலையில், இதுதான் இந்திய வங்கி கொள்ளை வரலாற்றில் மிகப்பெரிய கொள்ளையாக கருதப்படுகிறது. அதேசமயம் கொள்ளை சம்பவம் நடந்தபோது வங்கி ஊழியர்கள், வாடிக்கையாளர்கள், இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் என யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படாமல் கனக்கச்சிதமாக இந்த கொள்ளை சம்பவம் அரங்கேறியது.
இப்படி திட்டம் போட்டு பக்காவாக கொள்ளையடித்ததை போலீசாரே பாராட்டியதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. படமும் இதனை அடிப்படையாக கொண்டது என்பதை நிரூபிப்பது போல படத்தின் டைட்டிலில் ரூபாய் நோட்டின் பின்னணி இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.