தாய்லாந்து நாட்டில் துணிவு படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ள அஜித்தின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள நடிகர் அஜித் 3வது முறையாக தயாரிப்பாளர் போனி கபூர் - இயக்குநர் ஹெச்.வினோத் கூட்டணியில் நடித்து வருகிறார். ஏற்கனவே நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்கள் கலவையான விமர்சனத்தை சந்தித்த நிலையில் 3வது படத்தை பெரும் எதிர்பார்ப்போடு ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். அஜித்தின் 61வது படமாக உருவாகி வரும் இப்படத்திற்கு “துணிவு” என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த படத்தில் நாயகியாக பிரபல நடிகை மஞ்சுவாரியர் நடித்துள்ள நிலையில் ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். வங்கி கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இதன் படப்பிடிப்பு ஹைதராபாத், பாங்காங், விசாகப்பட்டினம் உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்றது.ஏற்கனவே 80 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்து விட்ட நிலையில் மீதமுள்ள படப்பிடிப்பு தாய்லாந்து நாட்டில் உள்ள பேங்காக்கில் நடைபெற்று வருகிறது.
இதனிடையே கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி துணிவு படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகியது. மாஸ் லுக்கில் கையில் துப்பாக்கியுடன் இருக்கும் அஜித்தை பார்க்கும் போது கண்டிப்பாக இப்படம் ரசிகர்களை கவரும் என கருத்துக்கள் பரவ தொடங்கியது. இதனைத் தொடர்ந்து மீதமுள்ள படப்பிடிப்பை முடிக்கும் வகையில் அஜித், மஞ்சு வாரியர் உள்ளிட்ட படக்குழுவினர் தாய்லாந்து செல்லும் புகைப்படங்கள்,வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியது.
இதற்கிடையில் கடந்த வாரம் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் பிரபலங்களான அமீர், பாவனி மற்றும் சிபி சக்கரவர்த்தி மூவரும் துணிவு படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் துணிவு படப்பிடிப்பில் கலந்துக் கொண்டுள்ள 3 பேரும் நடிகர் அஜித்துடன் செல்ஃபி எடுத்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.இதில் செல்ஃபி புகைப்படம் ஒன்றை நடிகர் அஜித்தே எடுத்துள்ளார். இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.