திருச்சியில் நடக்கும் 47வது மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் நடிகர் அஜித் குமார் 10, 25, 50 மீட்டர் பிரிவுகளில் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருச்சி மாநகர கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் செயல்பட்டு வரும் ரைபிள் கிளப்பில் 47-வது மாநில துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி, பிஸ்டல் மற்றும் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டி தொடங்கியது. இந்த மைதானத்தில் திருச்சி கே.கே.நகர் மாநகர ஆயுதப்படை வளாகத்தில் உள்ள திருச்சி மாநகர ரைபிள் கிளப் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. மாவட்ட, தேசிய மற்றும் சர்வதேச துப்பாக்கி சுடும் போட்டிக்கு கலந்து கொள்ள பயிற்சி பெறும் வகையில் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.
திருச்சி மாநகர ரைபிள் கிளப்பில் மொத்தம் 215 நிரந்தர உறுப்பினர்கள் மற்றும் மாணவர்களும் உள்ளனர். மேற்படி ரைபிள் கிளப்பில் 50 மீட்டர் தூரத்தில் ஒரு சுடு தளமும், 25 மீட்டர் தூரத்தில் ஒரு சுடுதளமும், 10 மீட்டர் தூரத்தில் 3 சுடுதளம் மற்றும் உடற்பயிற்சி கூடமும் உள்ளது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து துப்பாக்கி சுடுதலில் பயிற்சி பெற்ற சுமார் 1,300 போட்டியாளர்கள் பங்கேற்று வருகிறார்கள். இதன் தொடக்க விழாவில் கலெக்டர் பிரதீப் குமார், போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன், ரைபிள் கிளப் ஒருங்கிணைப்பு செயலாளர் செந்தூர் செல்வன், பொருளாளர் சிராஜுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் , தேசிய ரைபிள் சங்க கவுரவ செயலாளர் ரவிகிருஷ்ணன் தொடக்கவுரையாற்றினார். தமிழ்நாடு துப்பாக்கி சுடும் சங்க செயலாளர் வேல்சங்கர் போட்டிகளை பற்றி விளக்கி கூறினார். இதில்10 மீட்டர், 25 மீட்டர் மற்றும் 50 மீட்டர் சுடு தளத்தில் பிஸ்டல் மற்றும் ரைபிள் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் சிறியவர்கள், இளைஞர்கள், முதியவர்கள் என தரம் பிரிக்கப்பட்டு சப்யூத் (16 வயது வரை), யூத் (19 வரை), ஜீனியர் (21 வரை), சீனியர்(21 முதல் 45 வயது வரை), மாஸ்டர் (45 வயது முதல் 60 வயது வரை) மற்றும் சீனியர் மாஸ்டர் (60 வயதிற்கு மேல்) என தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த போட்டி பிஸ்டல் துப்பாக்கி சுடுவதற்கான போட்டியாளர்களுக்கு வருகிற 28-ந் தேதி வரை போட்டிகள் நடத்தப்பட்டு, இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்படுகிறது. 29-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை ரைபிள் துப்பாக்கி சுடுபவர்களுக்கான போட்டிகள் நடக்கின்றன. இதில் வெற்றி பெறுபவர்கள் தென்னிந்திய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொள்ள முடியும் என்று திருச்சி காவல்துறை கமிஷனர் கார்த்திகேயன் கூறினார்.
அதன்படி, 51 வயதான நடிகர் அஜித் குமார் 45 வயது முதல் 60 வயது வரை வரையிலான மாஸ்டர் என்ற 10, 25, 50 மீட்டர் பிரிவுகளில் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் அஜித் குமார் வீரபுரம் போலீஸ் ட்ரைனிங் சென்டரில் துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலானது. இந்த நிலையில், திருச்சியில் நடக்கும் மாநில அளவிலான துப்பாக்கிச் கூடுதல் போட்டியில் நடிகர் அஜித் பங்கேற்கிறார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்