அது தொடர்பான சில புகைப்படங்களும் இணையத்தில் பரவி வருகின்றன


தமிழ் சினிமா துவங்கிய காலத்திலிருந்தே ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதாவது ஒரு நடிகர் கொண்டாடப்படுவது இங்கு இயல்பே. ஆனால் ஒருவர் மட்டும் தன்னைச் சுற்றி நடக்கும் கொண்டாட்டங்களை கண்டுகொள்ளாமல் தன் பணியையும், தன் கடமையையும் மட்டுமே செய்து கொண்டிருக்கிறார் என்றால் அது தான் அவருக்கான அடையாளம்.  வெளியிடங்களில் தலைகாட்டுவதில்லை, பட விழாக்களுக்கு வருவதில்லை, சோஷியல் மீடியாவுக்கு நோ என தான் உண்டு தன் வேலை உண்டு என பயணித்தாலும் அவ்வப்போது இந்திய அளவில் அடிக்கடி வைரலாவார் அஜித். திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல், புகைப்படக்கலைஞர், துப்பாக்கிச் சுடுதல், கார் ரேஸ், பைக் ரேஸ், சைக்கிள் ரைடு, பைக் ரைடு, ட்ரோன் தொழில்நுட்பத்தில் ஆர்வம் என தனக்கு பிடித்ததை ஆர்வமுடன் செய்வதில் அஜித்துக்கு நிகர் அவரே. அந்த வகையில் தற்போது பைக்கிலேயே உலகைச் சுற்ற தீவிரமாக முயற்சி செய்து வருகிறார் அஜித். 




அந்த வகையில் சமீபத்தில் 'வலிமை' பட ஷூட்டிங்கிற்காக ரஷ்யா சென்ற அஜித், அங்குள்ள பைக் ரேஸர்களுடன் சேர்ந்து சுமார் 5000 கிலோ மீட்டர் பைக் பயணம் மேற்கொண்டார். பின்னர், சென்னை வந்த அஜித் சில நாட்கள் குடும்பத்தினருடன் இருந்துவிட்டு மீண்டும் தன்னுடைய சாகசங்களை கையில் எடுத்துள்ளார். இந்நிலையில், தற்போது டெல்லி சென்றுள்ள நடிகர் அஜித், அங்கு தாஜ்மஹாலை ரசித்ததுடன் அல்லாமல், ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டது சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த பயணத்தின் போது, சாகச பெண்மணி ஒருவரை சந்தித்துள்ளார் அஜித்.  






உலகம் முழுக்க பைக்கிலேயே சுற்றி வந்த சாகசப் பெண்மணியான மாரல் யாசர்லூவை நேரில் சந்தித்து அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் நடிகர் அஜித். மேலும் , எதிர்காலத்தில் பைக்கில் உலக பயணம் மேற்கொள்ள தேவையான ஆலோசனையும் கேட்டறிந்துள்ளார். டெல்லியில் இந்த சந்திப்பு நடந்துள்ளது. வெளியான தகவலின்படி, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா போன்ற இடங்களில் பைக் ட்ரிப் செல்ல நடிகர் அஜித்குமார் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. 


மாரல் யாசர்லூ இதுவரை 7 கண்டங்களையும், 64 நாடுகளையும் பைக்கிலேயே சுற்றிய, 1 லட்சத்திற்கும் அதிகமான கிலோ மீட்டர் பயணம் செய்திருக்கிறார். அதிலும் குறிப்பாக ஆறு மாத கர்ப்பிணியாக இருக்கும்போது இந்த சாதனையை செய்துள்ளார்.